French PM Resigns: பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே திடீர் ராஜினாமா..! அதிபர் மாக்ரோனின் திட்டம் என்ன?
French PM Resigns: பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
French PM Resigns: பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
பிரான்ஸ் பிரதமர் ராஜினாமா:
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில், இம்மானுவேல் மாக்ரன் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து அதிபராக உள்ளார். அடுத்த ஐந்து மாதங்களில் நடைபெற உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக, தனது அரசமைப்பில் சில மறுசீரமைப்புகளை செய்ய அவர் விரும்புவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் தான் தனது பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் எலிசபெத் போர்னே, அதிபர் இம்மானுவேல் மாக்ரோனிடம் கடிதம் வழங்கியுள்ளார். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் குடியேற்றத்தை நிர்வகிப்பதில் அரசாங்கத்தின் தோல்விகள் பற்றிய பரவலான அதிருப்தி நிலவும் சூழலில் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அதைதொடர்ந்து, புதிய பிரதமர் யார் என்பது தொடர்பான எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இது ஐரோப்பிய அரசியல் வட்டாரங்களில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
Madame la Première ministre, chère @Elisabeth_Borne, votre travail au service de notre Nation a été chaque jour exemplaire. Vous avez mis en œuvre notre projet avec le courage, l’engagement et la détermination des femmes d’État. De tout cœur, merci. pic.twitter.com/G26ifKfKzj
— Emmanuel Macron (@EmmanuelMacron) January 8, 2024
நன்றி சொன்ன மாக்ரோன்:
இதுதொடர்பாக அதிபர் மாக்ரோன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அன்பிற்குரிய பிரதமர் மேடம் எலிசபெத் போர்னே நமது தேசத்தின் சேவையில் உங்கள் பணி ஒவ்வொரு நாளும் முன்மாதிரியாக உள்ளது. பிரான்ஸ் பெண்களின் தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் உறுதியுடன் எங்கள் திட்டத்தை செயல்படுத்தினீர்கள். உங்களது சேவைக்கு முழு மனதுடன், நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த பிரதமர் யார்?
62 வயதான எலிசபெத் போர்ன், மாக்ரோனின் அரசாங்கத்தில் சேர்வதற்கு முன்பு பல சோசலிஸ்ட் கட்சி அமைச்சர்களின் கீழ் பணியாற்றிய ஒரு தொழில் அதிகாரி ஆவார். கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் முதல் அவர் பிரதமர் பதவியை வகித்து வந்தார். பிரான்சில் பிரதமர் பதவியை வகித்த இரண்டாவது பெண் என்ற பெருமை அவருக்கு உண்டு. இவரது ராஜினாமாவை தொடர்ந்து, 34 வயதான கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல், 37 வயதான பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டின் லெகோர்னு, நிதி மந்திரி புருனோ லு மைர் மற்றும் முன்னாள் விவசாய அமைச்சர் ஜூலியன் டெனோர்மாண்டி ஆகியோர் அடுத்த பிரதமருக்கான வேட்பாளர்களில் முன்னிலை வகிக்கின்றனர். அட்டல் அல்லது லெகோர்னு ஆகிய இருவரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், பிரான்சில் இதுவரை இல்லாத வகையில் மிகவும் இளம் வயது நபர் ஒருவர் பிரதமராக வாய்ப்புள்ளது.