Crab Fossil in Dinosaur Times | டைனோசர் காலத்தில் வாழ்ந்த நண்டு!’ : பிசினுக்குள் அழியாமல் இருந்த கிடைத்த படிமம்..!
கடந்த அக்டோபர் 20 அன்று, சைன்ஸ் அட்வான்ஸஸ் என்ற ஆய்விதழில் வெளியான ஆய்வில் டைனோசர் காலத்தில் வாழ்ந்த நண்டு ஒன்றின் படிவம் மரத்தின் பிசின் வகை ஒன்றில் இருந்ததை சர்வதேச ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
புதை படிவங்களாகக் கிடைக்கும் தொல்பொருள்கள் அழிந்துபோன உயிரினங்களின் உடற்கூறு, அதன் அறிவியல் முதலான தகவல்களை நமக்கு அளிக்கின்றன. மரங்களில் இருந்து கிடைக்கும் பிசின் வகைகளில் மண்ணில் வாழும் உயிரினங்கள், குறிப்பாக பூச்சிகளின் படிவங்கள் நமக்குக் கிடைக்கின்றன. சில அரிதான தருணங்களில், மரங்களில் கிடைக்கும் பிசின் வகைகளில் நீர் உயிரினங்களும் கிடைக்கும்.
கடந்த அக்டோபர் 20 அன்று, சைன்ஸ் அட்வான்ஸஸ் என்ற ஆய்விதழில் வெளியான ஆய்வில் டைனோசர் காலத்தில் வாழ்ந்த நண்டு ஒன்றின் படிவம் மரத்தின் பிசின் வகை ஒன்றில் இருந்ததை சர்வதேச ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Cretapsara athanata என்று அழைக்கப்படும் தற்கால நண்டு வகைக்கும், தற்போது கிடைத்துள்ள பழங்கால நண்டின் படிவத்திற்கும் மைக்ரோ அளவில் சிடி ஸ்கேன் செய்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வாளர்களுக்குக் கிடைத்த தொல்பொருள் படிவத்தில் இருந்த நண்டு வகையின் மெல்லிய உறுப்புகளும் பாதுகாப்பாக இருந்தது ஆய்வாளர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் நண்டுகள் அதிகமாகத் தோன்றிய போது, பல்வேறு பழைய நண்டுகளின் பிரிவுகள் அழிந்து, புதியவை தோன்றின. டைனோசர் காலத்து நண்டு வகையும், தற்கால நண்டு வகையும் அந்தக் குறிப்பிட்ட காலத்தில் ஒன்றாகத் தோன்றியவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
படிவமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள நண்டு வகையின் வயது சுமார் 200 மில்லியன் ஆண்டுகளாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. எனினும், நிலத்தில் வாழ்ந்த நண்டுகளின் படிவங்கள் மிகக் குறைவாக கிடைக்கின்றன. அப்படியே கிடைத்தாலும், அவற்றின் கால்கள், நகங்கள் ஆகியவை தனித்தனியாகவே கிடைத்துள்ளன. இதுகுறித்து பேசியுள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் ஜேவியர் லூக், `இப்போது கிடைத்துள்ள புதைபடிவம் என்பது அபூர்வமானது. அது முற்றிலும் முழுமையாக இருப்பதோடு, அதன் உடலில் ஒரு முடி கூட காணாமல் போகவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது’ என்று கூறியுள்ளார்.
சீனாவின் யுனான் பகுதியிலுள்ள அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படிவம் மீது மைக்ரோ சிடி ஸ்கேன் எடுத்துள்ள ஆய்வாளர்கள் இந்த நண்டின் முழு உருவத்தை 3டி வடிவத்தில் உருவாக்கியுள்ளதாகவும் அதன் மூலம் அதனை ஆய்வு செய்து வருவதாகவும் கூறியுள்ளனர். முழு உயிரினமாகக் கிடைத்துள்ள இந்த நண்டின் உடலில் அதன் சிறிய கொம்புகள், வாயின் ஓரத்தில் உள்ள மெல்லிய ரோமங்கள் முதலானவற்றோடு, இந்த நண்டு நீருக்குள் மூச்சு விடுவதற்காக செதில்கள் கொண்டிருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர். செதில்கள் இருந்த நீர் உயிரினம் ஒன்று, நில உயிரினங்கள் கிடைக்கும் பிசின் வகைகளில் முழுவதுமாகப் படிவமாகப் புதைந்துள்ளது எப்படி எனவும் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த ஆய்வுகளின் மூலம், சில உயிரினங்கள் ஏன் நண்டுகளாகப் பரிணாமம் அடைகின்றன என்பதும், காலப் போக்கில் அவை எப்படி தற்கால வடிவங்களை அடைகின்றன என்பதையும் கண்டறிய ஆய்வாளர்கள் முயன்று வருகின்றனர்.