Putin: போதும் நிறுத்திக்கலாம்..! பேசி தீத்துக்க நான் ரெடி - உக்ரைனுக்கு அழைப்பு விடுத்த ரஷ்ய அதிபர் புதின்
Russia Ukraine War: உக்ரைன் உடனான போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக நேரடி அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

Russia Ukraine War: உக்ரைன் உடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு தங்கள் தரப்பு தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
பேச்சுவார்த்தைக்கு தயார் - ரஷ்யா
உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கிய 3 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்நாட்டுடன் இருதரப்பு அமைதி பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார் என, முதல்முறையாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். ஈஸ்டர் தினத்தன்று அமல்படுத்தப்பட்ட போர் நிறுத்தத்தை தொடர்ந்து அமல்படுத்த அவர் விரும்புவதாகவும் ரஷ்யா அரசு தெரிவித்துள்ளது. அந்நாட்டு செய்தி தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், “நானும், உக்ரைனும் சனிக்கிழமை அறிவித்த 30 மணி நேர ஈஸ்டர் போர்நிறுத்தத்திற்குப் பிறகு உக்ரைனில் சண்டை மீண்டும் தொடங்கியது. எந்தவொரு அமைதி முயற்சிகளுக்கும் நாங்கள் திறந்திருக்கிறோம், உக்ரைனிடமிருந்தும் அதையே எதிர்பார்ப்பதாகவும்” பேசியுள்ளார்.
ஒப்பந்தம் கையெழுத்தாகுமா?
"இருதரப்பும் பொதுமக்களை இலக்குகளாக தாக்காதது குறித்து விவாதிக்க முடியும் என்று புதின் கூறியபோது, உக்ரைன் தரப்புடன் பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்துரையாடல்களையும் அவர் மனதில் வைத்திருந்தார். புதினும் ரஷ்ய தரப்பும் அமைதியான தீர்வை நாடுவதற்குத் திறந்தே உள்ளன. நாங்கள் அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம், நிச்சயமாக, அது பலனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை நீட்டிப்பதை வரவேற்பதாக அமெரிக்காவும் தெரிவித்துள்ளது.
லண்டன் சென்ற உக்ரைன் குழுவினர்:
இதனிடையே, தங்கள் தரப்பு அதிகாரிகள் அடங்கிய குழுவை உக்ரைன் அரசு லண்டனுக்கு அனுப்பியுள்ளது. அங்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாட்டு அதிகாரிகளை சந்தித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். பாரீஸில் கடந்த வாரம் நடந்த சந்திப்பின் தொடர்ச்சியாக தற்போது லண்டனில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் 3 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆலோசனையில் ஈடுபட உள்ளன.
ரஷ்யா மீது குற்றச்சாட்டு:
போர் நிறுத்தத்திற்கு தயாராக இருப்பதாக ரஷ்யா கூறி வரும் நிலையில், சனிக்கிழமை அன்றும் போர் நிறுத்தத்தையும் தாண்டி ரஷ்யா தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். இந்த போரை நீட்டித்து கொண்டு செல்ல ரஷ்யா விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “உக்ரைன், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா - நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை அடைந்து, உண்மையான மற்றும் நீடித்த அமைதியை நிலைநாட்ட, முன்பு செய்தது போலவே, முடிந்தவரை ஆக்கப்பூர்வமாக முன்னேற நாங்கள் தயாராக உள்ளோம்" என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவும், உக்ரைன் - ரஷ்யா போரில் சில நாட்களுக்குள் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால், நாங்கள் அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து முற்றிலும் விலகிச் செல்லக்கூடும் என்று கூறியிருந்தனர். இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை, டிரம்ப் அதிக நம்பிக்கையுடன், இரு தரப்பினரும் "இந்த வாரம்" ஒரு ஒப்பந்தத்தை "நம்பிக்கையுடன்" செய்வார்கள் என்று கூறினார். இந்நிலையில் தான், அமைதி பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் என புதின் அறிவித்துள்ளார்.





















