மாணவியின் தலைமுடியை வெட்டிய ஆசிரியை... ரூ.7 கோடி இழப்பீடு கேட்கும் தந்தை!
கலப்பு இனத்தவரான தனது மகளின் அரசியல் சாசன உரிமையை அவரது தலைமுடியை வெட்டி மீறி இருப்பதாக அவரது தந்தை புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்தவர் ஜிம்மி ஹாப்மேயர். கலப்பின தம்பதிக்கு மகனாக பிறந்த இவர் வெள்ளை பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 7 வயதில் மகள் உள்ளார். மவுன்ட் பிளசன்ட் நகரில் உள்ள தொடக்கப் பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த தனது மகளின் தலைமுடி ஒரு பக்கம் மட்டும் வெட்டப்பட்டு இருந்ததை கண்டு அவரது தந்தை ஜிம்மி அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். பேருந்தில் வரும்போது தன்னுடன் படிக்கும் மாணவி ஒருவர் கத்திரியால் தனது முடியை வெட்டியதாக தெரிவித்துள்ளார்.
பள்ளி நிர்வாகத்திடம் புகாரளிக்க முடிவெடுத்தார் ஜிம்மி ஹாப்மேயர். பள்ளிக்கு தனது மகளை அழைத்துச் சென்று அவரது முடி வெட்டப்பட்டது குறித்து தெரிவித்துவிட்டு அவரை சலூன் கடைக்கு அழைத்து சென்று உள்ளார். அங்கு தனது மகளின் தலை முடியை சீரமைத்து இருக்கிறார். இந்த சூழலில் அடுத்த 2 நாட்கள் கழித்து ஜிம்மிக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிக்கு சென்று வீட்டுக்கு வந்த தனது மகளின் தலை முடி மீண்டும் கத்தரிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இம்முறை முடியை வெட்டியது சக மாணவி அல்ல. ஆசிரியை. தனது தலைமுடியை சீராக்குவதாக கூறி பள்ளி ஆசிரியை ஒருவர் இப்படி செய்ததாக மாணவி தனது தந்தையிடம் தெரிவித்தார். ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றார் ஜிம்மி.
ஆசிரியை மீது புகார் அளிக்க அவர் பள்ளி செல்லவில்லை. மிச்சிகனில் உள்ள நீதிமன்றத்துக்கு சென்றார். அங்கு தன் மகளின் தலைமுடியை வெட்டிய ஆசிரியை மீதும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் வழக்கு தொடர்ந்தார் ஜிம்மி. கலப்பு இனத்தவரான தனது மகளின் அரசியல் சாசன உரிமையை அவரது தலைமுடியை வெட்டி மீறி இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
தனது மகள் இனப் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதாகவும், இனத்தை காரணம் காட்டி மிரட்டப்பட்டு இருப்பதாகவும் வழக்கில் குறிப்பிட்டு இருக்கிறார். அதுபோல் பள்ளி நிர்வாகம் தங்கள் ஆசிரியர்களை முறையாக கண்காணிக்கவில்லை என்றும், சரியாக எதையும் சொல்லித்தரவில்லை எனவும், மாணவர்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை என்றும் புகாரில் கூறியுள்ளார்.
தனது மகளின் தலை முடியை வெட்டிய ஆசிரியையும், மாணவியும் வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். தனது மகளை இன ரீதியாக நடத்தி அவரது தலைமுடியை வெட்டி அவமானப்படுத்தியதற்காக 1 கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.7 கோடி) இழப்பீடாக வழங்க வேண்டும் என ஜிம்மி நீதிமன்றத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.
இந்த வழக்கு குறித்த செய்தி வெளியானதில் இருந்து ஜிம்மிக்கும் அவரது மகளுக்கும் ஆதரவு பெருகி வருகிறது.