World Earthquake: அதிரும் உலக நாடுகள்.. ஒரே நாளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்.. அச்சத்தில் நடுங்கும் மக்கள்
ஒரே நாளில் இந்தோனேசியா, மலேசியா மற்றும் வங்கதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் இந்தோனேசியா, மலேசியா மற்றும் வங்கதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவில் நிலநடுக்கம்:
மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து 544 கிலோமீட்டர் தொலைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7 என்ற அளவில் பதிவாகியுள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியதால், உள்ளே உறங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை வெளியேறியுள்ளனர்.
இந்தோனேஷியாவில் சுனாமி எச்சரிக்கை:
இந்தோனேஷியாவின் மேற்கு சுமத்ரா தீவில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவானது. இதனால் பல கட்டடங்கள் குலுங்கியதால், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு 2 மணி நேரத்திற்கு பின்பு அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. பாடாங் பகுதியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் நிலநடுக்கம்:
வங்கதேச தலைநகர் டாக்கா அருகே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. டாக்காவிலிருந்து 21 கி.மீ தொலைவில் நள்ளிரவு 1.45 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் ரிக்டர் அளவுகோலில் 4ஆகப் பதிவாகி உள்ளது. இதனால் கட்டடங்கள் லேசாக குலுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை:
நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகள் பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம், நியூசிலாந்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. சில மணி நேரங்களுக்குப் பின் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
துருக்கி - சிரியா நிலநடுக்க பாதிப்பு:
துருக்கி - சிரியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் 59 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதோடு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்களுடம் சேதமடைந்தன. உலகளவில் அண்மை காலங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை சீற்றமாக இது கருதப்படுகிறது. இதன் தாக்கமே இன்னும் பொதுமக்களிடையே விலகாத நிலையில், ஜப்பான், இந்தியாவின் வடபகுதி, வங்கதேசம் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தற்போது அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் லண்டனில் பல்வேறு குறிப்பிட்டு பகுதிகளுக்கு நிலநடுக்க எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
நிலநடுக்கங்கள் ஏற்பட பருவநிலை மாற்றமும் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக வடக்கு மற்றும் தென் துருவங்களில் பனிப்பாறைகள் கரைந்து வருகிறது. துருவப் பகுதிகளில் இருக்கும் இந்த பனிப்பாறைகள் அடியே இருக்கும் பாறையின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அது மேலும் கீழ்நோக்கிச் செல்கிறது. பனி உருகும்போது அழுத்தம் குறைந்து மெல்ல அது மீண்டும் எழுகிறது. இந்த மீள் எழுச்சியானது நிலநடுக்கத்திற்கு சிறிய காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதோடு, டெக்டோனிக் தட்டுகளின் நகர்வுகளும் நிலநடுக்கத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.