Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
Second Moon 2024 PT5: நாளையிலிருந்து நமது பூமிக்கு 2வது நிலவு வரப்போகிறது தெரியுமா.!
Second Moon In Tamil: நாம் வாழும் பூமி கோளானது சூரியனை சுற்றி வருகிறது. நமது பூமியை சுற்றிக் கொண்டே சூரியனையும் நிலவு சுற்றி வருகிறது. பூமியை நிரந்தரமாக நிலா சுற்றி வருவதால், பூமியின் துணைக்கோளாக நிலவு கருதப்படுகிறது
இந்நிலையில், பூமிக்கு கூடுதலாக 2வது நிலா வரப்போகிறது.அதுவும் நாளையே வரபோகிறது. என்னது.! இரண்டாவது நிலாவா.! என ஆச்சரியமாக இருக்கிறதா!. ஆம், இரண்டாவது நிலா குறித்து சற்று விரிவாக பார்ப்போம்.
பூமிக்கு இரண்டாவது நிலா?
விண்வெளியில் 9 கோள்களை தவிர இதர சிறுகோள்களும் மற்றும் குறுங்கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன. அவ்வப்போதுகூட, நாம் கேள்விப்படுவோம், பூமியை தாக்க வந்த மிகப்பெரிய பாறை விலகிச்சென்றது என்று. அதேபோன்றுதான், தற்போது ஒரு சிறிய சிறுகோள், பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு வருகிறது.
அதாவது நிலா பூமியை சுற்றி வருவது போல, இந்த சிறுகோளும் பூமியை சுற்றி வரப்போகிறது. ஆனால், நிரந்தரமாக நிலவை போன்று அல்ல, தற்காலிகமாக செப்டம்பர் 29 மற்றும் நவம்பர் 25 க்கு ஆகிய நாட்களுக்கு இடையில் சுமார் இரண்டு மாதங்களுக்கு பூமியை சுற்றும். இந்த சிறுகோளுக்கு 2024 PT5 என பெயரிடப்பட்டுள்ளது.
இதை அமெரிக்க வானியல் சங்கத்தின் ஆய்வுக் குறிப்புகளின்படி, 2024 PT5 பூமியின் தற்காலிக ‘மினி நிலவாக’ இருக்கும் என தெரிவித்துள்ளது. சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், நிலாவுக்கு ஒரு நண்பர் கிடைக்க போகிறது என வைத்துக் கொள்ளலாம்.
பார்க்க முடியுமா?
இது வெறும் கண்ணாலோ அல்லது தொலைநோக்கி அல்லது வீட்டு தொலைநோக்கியால் பார்ப்பது கடினம் என்றே வானியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதற்கான காரணம், அதன் சிறிய அளவுதான்.
கடந்த மாதம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி 2024 PT5 என்ற சிறுகோளைக் கண்டறியப்பட்டது. இது சுமார் 33 அடி (10 மீட்டர்) அகலம் கொண்டதாக நம்பப்படுகிறது. இது அர்ஜுனா சிறுகோள் பெல்ட்டில் இருந்து வந்தது என்றும் தகவல் தெரிவிக்கின்றன.ஆகையால் மிகவும் சக்தி வாய்ந்த தொழில்முறை உபகரணங்கள் மூலம் கண்டறியலாம் என்றும் கூறப்படுகிறது. ஆகையால், இந்த புகைப்படங்களை இஸ்ரோ, நாசா உள்ளிட்ட ஆராய்ச்சி மையம் வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.
இந்த சிறுகோள் இந்த ஆண்டு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டதால், நாம் கண்டுபிடிக்காதது எவ்வளவு இருக்கிறது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. நாம் கண்டுபிடிக்காத பல்லாயிரக்கணக்கான, நூறாயிரக்கணக்கான பொருட்கள் உள்ளன என வானியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Video: அமெரிக்காவிலுள்ள புயலை வீடியோ எடுத்த சர்வதேச விண்வெளி நிலையம்.! வியக்க வைக்கும் காட்சி.!
தற்காலிக நண்பர்கள்.!
இதுபோன்ற தற்காலிக குட்டி நிலவுகள் காணப்படுவது இது முதல் முறை அல்ல. 1981 மற்றும் 2022 இல் ஏற்பட்டது என்றும் , 2024 PT5 குட்டி நிலவானது இல் 2055 மீண்டும் பூமியின் சுற்றுப்பாதைக்குத் வரும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.ஆகையால், நிலாவுக்கு தற்காலிக நண்பர்களாக சில வந்து போவது வழக்கம்தான் என கூறப்படுகிறது. தற்போது பூமிக்கு இருக்கும் நிலாதான் எப்போதும் கூடவே வரும், நிலாவுக்கும் நட்பாக பூமிதான் நிரந்தரம் என்றும் சொல்லலாம். இவை அவ்வப்போது தற்காலிகமாக வந்து செல்லக்கூடியவை.