Sunita Williams: சர்வதேச விண்வெளி நிலையத்தின் தலைமை பொறுப்பு சுனிதா வில்லியம்சிடம் ஒப்படைப்பு : நாசா அறிவிப்பு.!
Sunita Williams: ரஷ்ய விண்வெளி வீரர் கொனோனென்கோ, சர்வதேச விண்வெளி நிலையத்தை தலைமையேற்றும் நடத்தும் பொறுப்பை சுனிதா வில்லியம்ஸிடம் ஒப்படைத்ததாக நாசா அறிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ்:
கடந்த ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவப்பட்ட போயிங் நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டார்லைனர் விண்கலமானது, விண்வெளி பயணங்களுக்கு வீரர்களை அழைத்துச் செல்வதற்கான பயணத்தை சோதனை செய்யும் வகையில், இரண்டு விண்வெளி வீரர்களான இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்றது.
முதலில் சுமார் எட்டு நாட்கள் பயணமானது திட்டமிடப்பட்டது. ஆனால், விண்கலத்தை உந்தி தள்ளும் அமைப்பில் , பல்வேறு சிக்கல்கள் காரணமாக , இவர்களது பயண காலமானது 8 மாதங்களுக்கு மேலாக நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, பிரச்னைகளை சரிசெய்ய போயிங் மற்றும் நாசா தீவிர முயற்சி செய்தது.
விண்கலத்தில் சிக்கல்:
இந்த சிக்கல்களால் ஸ்டார்லைனரின் விண்கலத்தில் பயணித்த மூத்த நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை உடனடியாக திரும்ப அழைத்து வருவதில் சிக்கல் எழுந்தது.
இதையடுத்து, ஸ்டார்லைனர் விண்கலத்தின் சிக்கல்கள் முழுமையாக சரிசெய்யப்படாத காரணத்தால், விண்வெளி வீரர்களை அழைத்து வருவதற்கு அனுமதியை போயிங் நிறுவனத்துக்கு நாசா மறுத்துவிட்டது. இதன் விளைவாக, அவர்களை பூமிக்கு கொண்டு வர ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தை பயன்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது. எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான SpaceX க்ரூ டிராகன் விண்கலம், செப்டம்பரில் வழக்கமான நான்கு விண்வெளி வீரர்களுக்குப் பதிலாக இரண்டு விண்வெளி வீரர்களை மட்டுமே கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வில்மோர் மற்றும் வில்லியம்ஸுடன் பூமிக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
தலைமை பொறுப்பு:
இதையடுத்து, ஸ்டார்லைனர் விண்கலமானது விண்வெளி வீரர்கள் இல்லாமல் தரையிறங்க திட்டமிடப்பட்டது. இந்த விண்கலமானது, செப்டம்பர் 7 ஆம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்நிலையில், போயிங் நிறுவனத்தின் அடுத்தகட்ட விண்வெளி வீரர்களுடனான பயணத்தை, அடுத்து எப்போது தொடங்குவது குறித்து நாசாவுடன் விரிவாக ஆலோசனைக்கு பிறகே தெரியவரும்.
இந்த தருணத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து மூன்று விண்வெளி வீரர்கள் சோயுஸ் விண்கலம் மூலம் பூமியை வந்தடைந்தனர். இதையடுத்து, சர்வதேச விண்வெளி நிலையத்தை தலைமையேற்று நடத்தும் பொறுப்பானது அனுபவம் வாய்ந்த வீராங்கனையான சுனிதா வில்லியம்சிடம் ஒப்படைக்கப்பட்டது.