Trump's Success: சாதித்த ட்ரம்ப்.. சாய்ந்த உக்ரைன்.. கையெழுத்தான ஒப்பந்தம்.. இனி ரஷ்யாவுக்கு சிக்கல் தான்...
அமெரிக்கா மற்றும் உக்ரைன் இடையே நீண்ட இழுபறியில் இருந்த முக்கியமான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகிவிட்டது. இதற்குப் பிறகு, உக்ரைனுக்கு நல்ல நேரம் தான் என்று கூறுலாம். ஆனால் ரஷ்யாவிற்கு.?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேட்ட ஒப்பந்தம் ஒன்றை போடுவதற்கு, 2 மாதங்களுக்கும் மேல் காலம்தாழ்த்தி வந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஒருவழியாக ஒப்புக்கொண்ட நிலையில், அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அது என்ன ஒப்பந்தம்.? பார்க்கலாம்...
ரஷ்யா - உக்ரைன் போர்
உக்ரைன் நேட்டோவில் இணைய உள்ளதாக வெளியான தகவலால் ஆத்திரமடைந்த ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்த போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் நிலையில், உக்ரைனுக்கு உதவிவந்த அமெரிக்கா, அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற உடன், அதன் உதவிகளை நிறுத்தியது. இதையடுத்து, உக்ரைனுக்கு சிக்கல் ஏற்பட்டது.
அமெரிக்காவின் முந்தைய அதிபர் ஜோ பைடன், முட்டாள் தனமாக உக்ரைனுக்கு எக்கச்சக்கமான பொருளுதவியையும், ஆயுத உதவியையும் செய்துவிட்டதாக குற்றம்சாட்டிய ட்ரம்ப், உக்ரைனுக்கான உதவிகளை நிறுத்துவதாக அறிவித்தார். மேலும், அமெரிக்கா உக்ரைனுக்கு அளித்த உதவிகளுக்கு ஈடாக, அங்குள்ள அரிய வகை கனிமங்களை வெட்டி எடுக்கும் உரிமையை வழங்க வேண்டும் என, உக்ரைனை வலியுறுத்தி வந்தார் ட்ரம்ப்.
ஆனால், ட்ரம்ப் கோரியதை ஏற்க மறுத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கனிம ஒப்பந்தம் போடுவதை இழுத்தடித்து வந்தார். இதனால், பல்வேறு வகைகளில் உக்ரைனை மிரட்டி வந்தார் ட்ரம்ப். ஆனாலும் பிடி கொடுக்காமல் இருந்தார் ஜெலன்ஸ்கி. இதனால், ஜெலன்ஸ்கி பொறுப்பற்றவர் என பயங்கரமாக சாடினார் ட்ரம்ப்.
இப்படிப்பட்ட சூழலில், ரஷ்யா-உக்ரைன் இடையே போரை நிறுத்தப் போவதாக அறிவித்த ட்ரம்ப், அதற்காக தூதரை நியமித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ரஷ்யாவுடன் சேர்ந்துகொண்டு, ஜெலன்ஸ்கி தான் ஒப்பந்தம் போடுவதை தாமதப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார் ட்ரம்ப். ஆனால், ரஷ்யா தான் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறிவந்தார் ஜெலன்ஸ்கி.
இப்படிப்பட்ட சூழலில், திடீரென நேற்று, அமெரிக்கா - உக்ரைன் இடையே கனிம ஒப்பந்தம் கையெழுத்தானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவழியாக கையெழுத்தான கனிம வள ஒப்பந்தம்
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற உடன், உக்ரைனுக்கான ராணுவ உதவிகள் நிறுத்தப்பட்ட நிலையில், 2 மாதங்களாக இழுபறியில் இருந்த கனிம வள ஒப்பந்தம் ஒருவழியாக கையெழுத்தாகியுள்ளது. வாஷிங்டனில் இந்த தகவலை உறுதி செய்த அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட், உக்ரைனின் நீடித்த அமைதி மற்றும் செழிப்புக்கான ஒப்பந்தமாக இது விவரிக்கப்படுவதாக தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் மூலம், உக்ரைனின் மறுகட்டமைப்புக்கான நிதி உதவியை அமெரிக்கா வழங்கும். மேலும், உக்ரைனின் பாதுகாப்பையும் அமெரிக்கா உறுதி செய்யும். அதே சமயம், கனிம வளங்கள் மீதான முழு உரிமை உக்ரைனிடமே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம், நீண்ட காலத்திற்கு, சுதந்திரமான, இறையாண்மை மற்றும் வளமான உக்ரைனை மையமாகக் கொண்ட ஒரு அமைதியான செயல்முறைக்கு ட்ரம்ப் நிர்வாகம் உறுதி பூண்டுள்ள செய்தியை, ரஷ்யாவிற்கு தெளிவாக எடுத்துரைப்பதாக ஸ்காட் பெசன்ட் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் பார்வை என்னவாக இருக்கும்.?
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இனி அமெரிக்காவின் முழு ஒத்துழைப்பும் உக்ரைன் பக்கம் தான் இருக்கும். இதனால், சமீபத்தில் நெருக்கமான அமெரிக்கா - ரஷ்யா இடையேயான உறவுகள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ரஷ்யா தான் போரை நிறுத்த விரும்பவில்லை என ஏற்கனவே ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
அப்படி இருக்கும் பட்சத்தில், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா உக்ரைனுக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதனால், சண்டை மேலும் தீவிரமடையுமே தவிர, முடிவுக்கு வராது. இந்த சூழலில், இந்த ஒப்பந்தத்தையடுத்து, ரஷ்யாவின் எதிர்வினை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தே, போர் முடிவுக்கு வருமா, வராதா என்பதை கணிக்க முடியும். என்ன நடக்கிறது பார்க்கலாம்...





















