Dengue : வழக்கத்திற்கு மாறாக அதிகமாகப் பரவும் டெங்கு.. அவசரநிலையாக அறிவித்த சிங்கப்பூர்.. பின்னணி என்ன?
சிங்கப்பூரில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் பரவுவதால் டெங்கு அவசரநிலை நிலவுவதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் பரவுவதால் டெங்கு அவசரநிலை நிலவுவதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
தெற்காசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் இதுவரை 11,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 5258 ஆக இருந்ததாக சிங்கப்பூர் அரசு கூறியுள்ளது. இதனால் டெங்கு அவசர நிலையை சந்தித்துவருவதாகவும் வழக்கத்திற்கு மாறாக இது முன்கூட்டியே வந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த வழக்கத்திற்கு மாறான நிகழ்வு சிங்கப்பூரில் மட்டுமல்லாது, டெங்கு காய்ச்சலை பரப்பும் எய்டீஸ் கொசுக்களுக்கு உகந்த தட்பவெப்பம் நிலவும் எல்லா இடங்களிலும் இந்த நிலை இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். உலக வெப்பநிலை மாறிவருவதால் இதுபோன்ற அதிபரவல்கள் இனி வருங்காலங்களில் சாதாரணமான ஒன்றாக மாறும் என்று கூறியுள்ளனர். பாதிப்புகள் வேகமாக உயரும்; இது நாம் உடனடியாக கையாள வேண்டிய அவசரநிலை என்று சிங்கப்பூரின் உள்துறை அமைச்சர் தேஸ்மாண்ட் டான் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் சமீபகாலமாக நிலவும் அதீத காலநிலை காரணமாக இந்த பரவல் அதிகமாகியிருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். அதிக வெப்பம் மற்றும் இடியுடன் கூடிய மழை போன்றவைகள் காரணமாக இந்த சமயங்களில் கொசுவும், டெங்குவை உருவாக்கும் வைரஸ்களும் தீவிரமாக பரவுகின்றன என்றும் இது தற்பது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் எண்டமிக்காக உள்ளது என்று உலக டெங்கு அறிக்கை 2022ல் உலக சுகாதார மையம் கூறியுள்ளது. இந்த அளவு கடந்த 50 ஆண்டுகளில் 30 மடங்கு அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் உலக சுகாதார மையம் கூறியுள்ளது.
சிங்கப்பூரில் டெங்கு உயர்வதன் பின்னணியில் அதிக வெப்பநிலை, ஈரப்பதமான சூழ்நிலை மற்றும் புதிதாகப் பரவும் வைரஸ் ஆகியவைதான் காரணம் என்றும், மாறிவரும் காலநிலை சூழ்நிலைகளை மிகவும் மோசமாக்கும் என்று எச்சரித்துள்ளதோடு, இதற்கு முந்தைய கணிப்புகள் காலநிலை மாற்றத்தால் உலக வெப்பமயமாதல் இந்த நோய் பரவும் பகுதிகளை விரிவாக்கியுள்ளது என்றும் டெங்கு பரவும் காலங்களை மாற்றியுள்ளது என்றும் ஆய்வாளர் ருக்லாந்தி டீ ஆல்விஸ் கூறியுள்ளார்.
டெங்கு காய்ச்சலால் அதிகம் பேர் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தாலும் ஆப்பிரிக்க நாடுகளில் தான் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஜீன் 1ம் தேதி வரையிலான காலகட்டத்தில், உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையின் படி 12,38,528 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக அறிக்கை அளிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் 5,44,125 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளதாகவும், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களில் 426 பேர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. உலகில் ப்ரேஸிலில் 11,14,758 பேருக்கும், பெருவில் 45,816 பேருக்கும், கொலம்பியாவில் 21,576 பேருக்கும், நிகாரகுவாவில் 12,171 பேருக்கும் பரவியுள்ளது. கடந்த மே4ம் தேதியில் இருந்து சுமார் 5,43,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 217 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.