iPhone Online Order:1.05 லட்சம் ரூபாய் ஐபோன் ஆர்டருக்கு... டெலிவரி பார்சல் கொடுத்த அதிர்ச்சி- வைரல் சம்பவம் !
ஆன்லைன் தளம் ஒன்றில் ஐபோன் ஆர்டர் செய்த நபருக்கு வந்த பார்சல் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் ஆன்லைன் வர்த்தகங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. குறிப்பாக அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இ-வர்த்தக தளங்களில் பலரும் ஆர்டர் செய்து பொருட்களை வாங்கி வருகின்றனர். சிறிய பொருட்கள் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை பலரும் இந்த ஆன்லைன் தளங்களில் ஆர்டர் செய்து வாங்கி வருகின்றனர். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதிலாக வேறு ஒரு பொருள் வந்தால் அது அவர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்துவிடும். அப்படி ஒருவர் ஆர்டர் செய்து ஏமாந்துள்ளார்? அவர் ஆர்டர் செய்தது என்ன? வந்தது என்ன?
இங்கிலாந்து நாட்டின் லீட்ஸ் பகுதியைச் சேர்ந்த டேனியல் கரோல் என்பவர் சமீபத்தில் ஒரு ஆன்லைன் தளத்தில் ஐ-போன் 13 ப்ரோ மேக்ஸ் போனை ஆர்டர் செய்துள்ளார். அந்தப் போனின் டெலிவரி இரண்டு வாரங்கள் தாமதமாக வந்துள்ளது. அதுவரை அவர் பல முறை அந்த ஆன்லைன் தளத்தை தொடர்பு கொண்டுள்ளார். ஒருவழியாக இரண்டு வார தாமதத்திற்கு பிறகு தன்னுடைய ஐபோன் வந்தது என்று இவர் மகிழ்ச்சியாக அந்த பார்சலை பிரித்துள்ளார்.
அப்போது இவருக்கு பெரிய ஏமாற்றமே நிறைந்துள்ளது. அதாவது அந்த பார்சலில் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸிற்கு பதிலாக இரண்டு டைரி மில்க் ஓரியோ சாக்லேட் இருந்துள்ளது. அதை பார்த்து அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதன்பின்னர் மீண்டும் டிஹெச்எல் டெலிவரி நிறுவனத்தை தொடர்பு கொண்டு தன்னுடைய புகாரை அளித்துள்ளார். அவர்கள் அதன்பின்பு இந்த பொருளை விற்ற நிறுவனத்திடமும் முறையிட்டுள்ளனர். தற்போது இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
டேனியில் ஒரு தளத்தில் 1.05 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோனை ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு முதலில் டிசம்பர் 17ஆம் தேதி டெலிவரி தாமதமாக வரும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்பின்னர் மீண்டும் டிசம்பர் 23ஆம் தேதிக்குள் பார்சல் டெலிவரி வரும் என்ற குறுஞ்செய்தி வந்துள்ளது. இந்தச் செய்திக்கு பிறகு அவர் டிஹெச்எல் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டப்பிறகு 20ஆம் தேதியன்று அவருடைய பார்சல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தியாவில் ஒருவர் ஐபோன் ஆர்டர் செய்த போது அவருக்கு சோப்பு ஒன்று பார்சலில் வந்தது. அந்தச் சம்பவம் பெருமளவில் வைரலானது. அதற்குபின்பு தற்போது மீண்டும் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் தளங்களின் டெலிவரிகளை பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க: டேட்டிங் அப்பில் மலர்ந்த காதல்... கூகுள் தேடலால் முடிந்தது- எப்படி?