Covaxin against Indian variant | Covaxin தடுப்பூசி இந்திய கொரோனா ஸ்ட்ரெயினை முடக்குகிறதா..? பகிரும் அமெரிக்க ஆய்வாளர்..
Covaxin தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் இந்திய இனவகை 617-க்கு எதிராக ஆண்ட்டிபாடிக்கள் உருவானது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவாக்ஸின் தடுப்பூசி இந்திய கொரோனா இனவகையான 1.617-ஐ செயலற்றுப்போக செய்வதாக அமெரிக்காவின் தலைமை மருத்துவ ஆலோசகரும் ஆய்வாளருமான மருத்துவர் அந்தோணி ஃபாஸி கூறியுள்ளார். இது தொடர்பாக மேற்படி நேரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் நாளொன்றுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பிரிட்டன் இன வகை, தென் ஆப்பிரிக்க வகை, இந்திய இனவகை என வெவ்வேறு இனவகைக் கொரோனா வைரஸ்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பிரிட்டன் இனவகை 50 சதவிகிதம் அதிவேகமாக மக்களிடையே பரவுகிறது. அதன் அடுத்த பரிணாமமாக மும்பையில் இந்திய இனவகைக் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்தப் பல்வேறு இனவகைகளைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மூன்றாவது கட்டமாக தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான தடுப்பூசி உற்பத்தியை இந்திய அரசு அதிகரித்துள்ளது.
தடுப்பூசிக்கான மூலப்பொருட்களும் அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவுக்கு உதவுவது குறித்து அண்மையில் பேட்டியளித்திருந்த அமெரிக்க அரசின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோணி ஃபாஸி, “இந்தியாவில் கோவாக்ஸின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் இந்திய இனவகை 617-க்கு எதிராக ஆன்டிபாடிக்கள் உருவானது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்றளவும் நாங்கள் தரவுகளைத் தொடர்ச்சியாக ஆய்வு செய்துவருகிறோம். இதற்காக கோவாக்ஸின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் ஆக்டிவ் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து வருகிறோம். முடிவுகள் எப்படியிருந்தாலும் தடுப்பூசி போடுவது மட்டும்தான் இந்தியாவிடம் இருக்கும் ஒரே தீர்வு” என அவர் குறிப்பிட்டுள்ளார்.