சீன உளவு பலூன் அமெரிக்க ராணுவ தளங்களில் தகவல் திரட்டியது: அறிக்கை
அமெரிக்காவின் அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே பறந்த உளவு பலூன் ராணுவ தளங்களில் இருந்து முக்கிய தகவல்களைத் திரட்டி அவற்றை உடனுக்குடன் சீனாவுக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே பறந்த உளவு பலூன் ராணுவ தளங்களில் இருந்து முக்கிய தகவல்களைத் திரட்டி அவற்றை உடனுக்குடன் சீனாவுக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. புகைப்படங்களைக் காட்டிலும் மின்னணு சிக்னல்களையே அதிகமாக உளவு பார்த்து அந்த பலூன் சீனாவுக்கு அனுப்பியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
என்பிசி செய்தி நிறுவனம் இது தொடர்பான செய்தியை திங்கள் கிழமை வெளியிட்டது. இது அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பைடன் அரசு எவ்வளவோ முயன்றும் தகவல் பரிமாற்றத்தைத் தடுக்க முடியவில்லை என்றும் அதை பாதுகாப்பான இடத்திற்கு விரட்டி பின்னரே அதை சுட்டு வீழ்த்த முடிந்தது என்றும் அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இது குறித்து வெள்ளை மாளிகை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. அதேபோல், அமெரிக்காவில் உள்ள சீன தூதரக அதிகாரிகளும் இது தொடர்பாக தொடர்ந்து மவுனம் காத்து வருகின்றனர்.
நடந்தது என்ன?
சீனாவின் உளவு பலூன் ஒன்று அமெரிக்காவின் அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே பறந்தது பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளின்கன் பீஜிங்குக்கு செல்வதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த சர்ச்சை வெடித்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
வானில் பறந்த அந்த பலூன் ஆனது சுமார் 3 முழு நீள பேருந்துகளின் அளவிற்கு வடிவத்தில் பெரியது. அதில், அதிக எடையுடன் கூடிய இயந்திரங்களுடன், வழிகாட்டுதல் மற்றும் தகவல்களைச் சேகரிப்பதற்கான மின்னணுவியல், பெரிய சோலார் பேனல்களையும் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும் வானில் சுமார் 80 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அமெரிக்காவின் கைவசம் உள்ள அதிநவீன போர் விமானங்கள் கூட அதிகபட்சமாக 65 ஆயிரம் அடி உயரத்திற்கு தான் பறக்க முடியும். அதனால் அந்த பலூனை சுட்டு வீழ்த்துவது கடினமாக இருந்தது. அதேநேரம், தற்போதுள்ள ஆயுதங்களை கொண்டு அழிக்கப்படும் அளவிற்கு, எளிதான வடிவமைப்பையும் அது கொண்டிருக்கவில்லை.
மறுப்பு தெரிவித்த சீனா: அமெரிக்க வான்பரப்புக்குள் பறந்தது உளவு பலூன் அல்ல என்றும், அது வானிலை ஆராய்ச்சிக்காக பறக்க விடப்பட்ட ஆகாய கப்பல் என்றும் சீனா விளக்கம் அளித்துள்ளது. அதில், மேற்கில் இருந்து வீசிய காற்று மற்றும் குறைவான சுய இயங்கு தன்மையால், ஆகாய கப்பல் திசை மாறி சென்று விட்டது. அது அமெரிக்க வான் பரப்புக்குள் தவறுதலாக நுழைந்ததற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டது.
சுட்டு வீழ்த்திய அமெரிக்கா:
ஆனாலும் அமெரிக்கா அதனை ஏற்கவில்லை. அதிபர் ஜோ பைடன் உத்தரவின்படி நேற்று சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதில் சிதறிய பலூன், அமெரிக்காவின் கரோலினா பீச் நகரம் அருகே கடல் பகுதியில் விழுந்தது.
இது குறித்து சீன வெளியுறவுத் துறை கூறும்போது, “சர்வதேச விதிகளை மீறி அமெரிக்கா செயல்பட்டிருக்கிறது. வானிலை ஆராய்ச்சிக்கான எங்களது பலூனை சுட்டு வீழ்த்தியது சட்டவிரோதம். இதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம்" என்று எச்சரிக்கை விடுத்தது. அதன் பின்னர் உளவு விவகாரம் தொடர்பாக அமெரிக்காவும், சீனாவும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.