College Leave: ”எல்லாரும் வீட்டுக்கு போய் லவ் பண்ணுங்க..” ஒரு வாரம் லீவு விட்ட கல்லூரிகள் - என்னப்பா நடக்குது?
மாணவர்கள் அனைவரும் இடையூறு இன்றி காதல் செய்வதற்கு ஏதுவாக, சீன கல்லூரிகள் ஒரு வார காலத்திற்கு விடுமுறை அறிவித்துள்ளன.
மாணவர்கள் அனைவரும் இடையூறு இன்றி காதல் செய்வதற்கு ஏதுவாக, சீன கல்லூரிகள் ஒரு வார காலத்திற்கு விடுமுறை அறிவித்துள்ளன. அந்நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்தை அதிகரிக்க, சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காதலிக்க ஒரு வாரம் விடுமுறை
சீனாவில் உள்ள ஃபேன் மெய் கல்வி குழுமத்திற்கு சொந்தமான ஒன்பது கல்லூரிகளில், ஏப்ரல் 1 முதல் 7ம் தேதி வரையில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ” இயற்கையை நேசிக்கவும், வாழ்க்கையை நேசிக்கவும், அன்பை அனுபவிக்கவும் மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் மாணவர்களுக்கு இந்த ஒருவார விடுமுறை வழங்கப்படுகிறது. எனவே மாணவர்கள் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே செல்லுங்கள், இயற்கையுடன் தொடர்பு கொள்ளுங்கள், வசந்த காலத்தின் அழகை உங்கள் இதயத்துடன் உணருங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மாணவர்கள், பயணங்கள் தொடர்பான குறிப்புகள், வீடியோக்கள், தங்களுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்பிக்க வேண்டும்.
கல்லூரி விவரம்:
விடுமுறை அளிக்கப்பட்டுள்ள இந்த கல்லூரிகளில் விமானிகள், விமானப் பணிப்பெண்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் விமான நிலையப் பாதுகாப்புப் பணியாளர்கள் உள்ளிட்ட விமானத் துறையில் உள்ள வேலைகளுக்கான பயிற்சி அளிக்கும் தொழிற்கல்வி கல்லூரிகளாகும். கடந்த 2019ம் ஆண்டு முதல் வசந்தகால விடுமுறை அளித்து வரும் நிலையில், நடப்பாண்டு விடுமுறையின் நோக்கமாக மலர்களை சந்தியுங்கள், காதலில் விழுங்கள் என்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
பிறப்பு விகிதம் சரிவு:
வேகமாக குறைந்து வரும் பிறப்பு மற்றும் திருமண விகிதங்களை அதிகரிக்க. சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உள்ளூர் நிறுவனங்கள், மாகாணங்கள் மற்றும் டவுன்ஷிப்கள் , 30 நாட்கள் "திருமண விடுப்பு" வழங்குவது அல்லது கிராமப்புறங்களில் வயதான திருமணமாகாத நபர்களை டேட்டிங் செய்ய நகரப் பெண்களைக் கேட்டு பரப்புரைகளை தொடங்குவது போன்ற வழிகளில் மக்களிடையே திருமணத்தின் மீதான ஆர்வத்தை தூண்ட நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது.
சீன அரசு தீவிரம்:
மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனா, 1980ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை வீட்டிற்கு ஒரு குழந்தை எனும் கொள்கையை பின்பற்றி வந்தது. இதனால், மக்கள் தொகை வெகுவாக குறைந்தது. கடந்த 2021ம் ஆண்டு 7.52 ஆக இருந்த சீனாவின் பிறப்பு விகிதம், கடந்த ஆண்டு 6.77 ஆக குறைந்தது. குழந்தைகளுக்கான பராமரிப்பு மற்றும் மருத்துவ செலவு, குறைவான வருவாய், பலவீனமான சமூக பாதுகாப்பு அமைப்பு மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகள் ஆகிய காரணங்களால், சீன இளைஞர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை விரும்புவதில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, குறைந்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தை அதிகரிக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைக்ளை எடுத்து வருவதோடு, பரிந்துரைகளையும் கேட்டு வருகிறது.