`குழந்தைகள் தவறு செய்தால் பெற்றோருக்குத் தண்டனை!’ - சீனாவில் அமலாகும் புதிய சட்டம்!
சீனாவில் சட்டத்திற்குக் கட்டுப்படாத குழந்தைகளைப் பெற்று வளர்த்த பெற்றோருக்குத் தண்டனை அளிக்கும் சட்டம் உருவாக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் சட்டத்திற்குக் கட்டுப்படாத குழந்தைகளைப் பெற்று வளர்த்த பெற்றோருக்குத் தண்டனை அளிக்கும் சட்டம் உருவாக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தச் சட்டத்தின் அடிப்படையில், குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் நாட்டின் கட்சி, தேசம், மக்கள், சோசியலிசம் ஆகியவற்றை விரும்புவதற்கு வலுக்கட்டாயமாகக் கற்பிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
குடும்பக் கல்வி வளர்ச்சி சட்டம் என்ற பெயரில் சீனாவில் நாடாளுமன்றத்தில் இந்த வாரம் அமல்படுத்தவுள்ளதாகக் கூறப்படும் இந்தச் சட்டத்தின் படி, பெற்றோரின் பாதுகாப்பில் வாழும் குழந்தைகள் கிரிமினல் நடவடிக்கைகளிலோ, பிற பிரச்னைகளிலோ ஈடுபடுவதை அதிகாரிகள் கண்டுபிடித்தால், அந்தப் பெற்றோருக்குத் தண்டனையாகக் குடும்பக் கல்வி வழிகாட்டு நிகழ்வுகளில் கட்டாயமாகப் பங்கேற்க வேண்டும் என விதிக்கப்படும்.
தேசிய மக்களின் காங்கிரஸ் என்று அழைக்கப்படும் சீன நாடாளுமன்றத்தில் இந்தச் சட்ட வரைவு முன்மொழியப்பட்டு, விவாதிக்கப்படும். இந்தச் சட்டம் காரணமாக பெற்றோருக்குக் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது ஊக்குவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
`பதின்பருவத்தைச் சேர்ந்தோர் பல்வேறு காரணங்கள் காரணமாகத் தவறான பழக்கங்களில் ஈடுபடுகின்றனர். அவற்றுள் குடும்பக் கல்வி இல்லாமல் இருப்பது மிக முக்கியமான காரணம்’ என சீன நாடாளுமன்றத்தின் விவகாரங்கள் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் சாங் தியெவெய் தெரிவித்துள்ளார். இந்தச் சட்டத்தின் மூலம், சீனாவிலுள்ள பெற்றோரும், குழந்தைகளின் காப்பாளர்களும் தங்கள் குழந்தைகளுக்குக் கட்சி, தேசம், மக்கள், சோசியலிசம் ஆகியவற்றை நேசிக்க கற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்படும்.
மேலும், இந்தச் சட்டம் காரணமாக, பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குப் பெரியவர்களை மதிப்பது, சிறியவர்களைக் கவனித்துக் கொள்வது ஆகியவையும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. சீனாவின் இளைஞர்களும் குழந்தைகளும் தங்கள் வீடுகளில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி சீன அரசின் இறுதி முயற்சியாக இந்தச் சட்ட வரைவு பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் சீனாவில் கல்வித்துறை குழந்தைகள் எவ்வளவு நேரம் வீடியோ கேம்களில் செலவிட வேண்டும் என்பதை நிர்ணயித்ததோடு, 18 வயதுக்குக் குறைவானவர்கள் வார நாள்களில் ஆன்லைன் கேம்கள் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, வார இறுதி நாள்களில் வெறும் 3 மணி நேரம் மட்டும் விளையாடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் அரசு செய்தி ஊடகங்களில் ஆன்லைன் கேமிங் என்பது போதைப் பொருளைப் போல, அடுத்த தலைமுறை முழுவதுமாக அச்சுறுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளின் கல்வி பாரத்தைக் குறைப்பதற்காக பள்ளிக்குப் பிறகான டியூஷன், ஹோம் வொர்க் முதலானவை சமீபத்தில் தடை செய்யப்பட்டன.
சமீபத்தில் சீனக் கல்வி அமைச்சகம் சீனாவின் இளம் ஆண்கள் இணையத்தில் பிரபலங்களைப் பின்பற்றுவதைத் தவிர்த்துவிட்டு, `பெண் தன்மையைக் குறைக்க’ வேண்டும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.