"இஸ்ரேல் வரம்பு மீறுகிறது; அனைத்து மக்களுக்கும் தண்டனை ஏன்” - காசா மக்களுக்காக கொதித்த சீனா
தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், காசா பகுதியில் வசிக்கும் அப்பாவி பாலஸ்தீனியர்கள் மீது நான்கு முனைகளில் இருந்தும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. கடந்த 7ஆம் தேதி, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடங்கியது. காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பு, 5,000 ராக்கெட்டுகளை கொண்டு இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது.
அதுமட்டும் இன்றி காசா பகுதியில் இருந்து ஆயுதம் ஏந்திய சிலர் இஸ்ரேலுக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்று குவித்து வருவதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. அதேபோல, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது மட்டும் இன்றி அப்பாவி மக்கள் மீதும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
பதற்றத்தை ஏற்படுத்தி வரும் இஸ்ரேல் போர்:
இந்த தாக்குதலில் பாலஸ்தீன காசா பகுதியில் மட்டும் 2,200க்கும் மேற்பட்டோர் பேர் கொல்லப்பட்டுள்னர். கொல்லப்பட்டவர்களில் 614 குழந்தைகளும் 370 பெண்களும் அடங்குவர். இஸ்ரேலில் 265 ராணுவ வீரர்கள் உள்பட 1300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 3,300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், காசா பகுதியில் வசிக்கும் அப்பாவி பாலஸ்தீனியர்கள் மீது நான்கு முனைகளில் இருந்தும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக, காசா பகுதியில் மின்சாரம், தண்ணீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை செல்ல விடாமல் இஸ்ரேல் அரசு தடுத்து வருகிறது. காசா பகுதியில் இருந்து மக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் ஆதரவு யாருக்கு?
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், இந்தியாவும் இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா, ஈராக் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் உடனான மோதலில் தன்னை தற்காத்து கொள்வதற்கான உரிமை இஸ்ரேலுக்கு இருப்பதாக ரஷிய அதிபர் புதின் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் வரம்பு மீறி செயல்பட்டு வருவதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். காசா பகுதியில் அனைத்து மக்களுக்கும் தண்டனை வழங்குவதை இஸ்ரேல் அரசு நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "சர்வதேச சமூகம் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இஸ்ரேல் செவிமடுக்க வேண்டும். காசா மக்கள் அனைவருக்கும் தண்டனை வழங்குவதை நிறுத்த வேண்டும்" என்றார்.