"குற்றச்சாட்டுகள் நிரூபணமானால்.." சீக்கிய பிரிவினைவாதி கொலை விவகாரத்தில் கனடா அமைச்சர் பரபர கருத்து
ஹர்தீப் சிங் கொலை தொடர்பாக கடந்த ஒரு மாதமாக விசாரணை நடத்தி வரும் கனடா, செல்போன் சிக்னல் மூலமாகவும் பல நபர்களின் மூலமாக உளவுத்தகவல்களை சேகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய கனடாவின் குற்றச்சாட்டு:
கடந்த ஜூன் மாதம் கனட நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கனடா பிரதமரின் குற்றச்சாட்டு உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்தை முற்றிலுமாக நிராகரித்த இந்தியா, அதற்கு கண்டனம் தெரிவித்தது.
"நிஜ்ஜார் கொலை குறித்து விசாரிக்கப்பட வேண்டும்"
இரு நாட்டு உறவில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், கனட பாதுகாப்புத்துறை அமைச்சர் பில் பிளேயர் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் ஆனால், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து குளோபல் நியூஸ்-க்கு அவர் அளித்த பேட்டியில், "இந்தியாவுடனான நமது உறவைப் பொறுத்தமட்டில் இது ஒரு சவாலான பிரச்னையாக இருக்கலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
ஆனால், அதே நேரத்தில், நாங்கள் ஒரு முழுமையான விசாரணையை நடத்தி உண்மையைப் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், எமது இறையாண்மையை மீறுவது தொடர்பாக கனடாவுக்கு குறிப்பிடத்தக்க கவலை உள்ளது" என்றார்.
ஹர்தீப் சிங் கொலை தொடர்பாக கடந்த ஒரு மாதமாக விசாரணை நடத்தி வரும் கனடா, சென்போன் சிக்னல் மூலமாகவும் பல நபர்களின் மூலமாக உளவுத்தகவல்களை சேகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கனடா குற்றச்சாட்டின் பின்னணியில் அமெரிக்காவா?
கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகள் பரிமாறி கொண்ட தகவல்கள், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிடமிருந்து கிடைத்த உளவுத்தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்தியா மீது கனடா பிரதமர் குற்றச்சாட்டு சுமத்தியதாக அமெரிக்காவின் மூத்த தூதர் டேவிட் கோஹன் தெரிவித்திருந்தார்.
இந்திய - கனட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், "பிரதமர் ட்ரூடோ எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்" என்றார்.
கனடா மீது பரபர குற்றச்சாட்டுகளை சுமத்திய இந்தியா, "தீவிரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக கனடா உள்ளது. கனடா அரசாங்கம் அவ்வாறு செய்யாமல், பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் உள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது நீதியை எதிர்கொள்ள அவர்களை இங்கு அனுப்ப வேண்டும்" என தெரிவித்தது.