’புதின் பெண்ணாக இருந்திருந்தால், பைத்தியக்காரத்தனமாக...' : போரிஸ் ஜான்சன் சொன்னது என்ன?
”toxic masculinity எனப்படும் மோசமான ஏற்படுத்தக் கூடிய ஆண்மையச் சிந்தனை, நடவடிக்கைக்கு புதின் நிகழ்த்தியுள்ள இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு" - போரிஸ் ஜான்சன்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் மீதான போரை அவர் தொடங்கியிருக்க மாட்டார் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
புதின் பெண்ணாக இருந்திருந்தால்...
ஜெர்மன் தொலைக்காட்சி ஒன்றுக்கு முன்னதாகப் பேட்டி அளித்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், "புதின் மட்டும் ஒரு பெண்ணாக இருந்திருந்தால், இது போன்ற பைத்தியக்காரத்தனமான, ஆடம்பரமான படையெடுப்பிலும், வன்முறைப் போரிலும் ஈடுபட்டிருக்க மாட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைன் மீது புதின் நடத்திய இந்தப் போர் " toxic masculinity எனப்படும் மோசமான ஆண்மையச் சிந்தனை, நடவடிக்கைக்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என்றும், உயர் அதிகாரப் பதவிகளில் பெண்கள் அதிகம் வந்து சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் புதின் கோரியுள்ளார்.
புதின் சமாதானத்தை விரும்பவில்லை...
மேலும் முன்னதாக மக்கள் நிச்சயமாக போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள், ஆனால் புதின் சமாதானத்தை முன்வைக்கவில்லை என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேரும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன்மீது போர்தொடுத்தது. அன்று தொடங்கி நடந்து வரும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தற்போது நான்கு மாதங்களை எட்டியுள்ளது. இந்தப் போரில் உக்ரைன் மட்டுமல்லாமல் ரஷ்யா உள்ளிட்ட பல உலக நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
5000 பேர் பலி
சுமார் 5000 உக்ரைன் மீதான இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் தங்கள் வீடுகளை இழந்தும் இடம்பெயர்ந்தும் வருகின்றனர். பல்வேறு நகரங்கள் இந்தப் போரில் அழிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக நேற்று (ஜூன்.28) மத்திய உக்ரைனின் க்ரெமென்சுக் நகரத்திலிருக்கும் வணிக வளாகத்தின் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. இந்தத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 36 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: US Women: கருக்கலைப்பு இல்லையா? இனி பாலுறவும் இல்லை - போராட்டத்தை கையில் எடுத்த பெண்கள்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்