Artemis 1: நிலவிலிருந்து பூமிக்கு திரும்புகிறது ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம்.. காரணம் இதுதான்?
நிலவை ஆய்வு செய்வதற்காக நாசா அமைப்பால் அனுப்பப்பட்ட ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம், இன்று நள்ளிரவு பூமியில் தரையிறங்குகிறது.
விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச அலவில் முன்னணியில் உள்ள அமெரிக்காவின் நாசா அமைப்பால் செலுத்தப்பட்ட, நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்கள் நமது புவிக்கு மேலே வலம் வந்துகொண்டு உள்ளன. பாதுகாப்பு, தொலைதொடர்பு என்ற பல்வேறு பிரிவுகளில் கவனம் செலுத்துவதோடு மட்டுமின்றி, மற்ற கிரகங்கள் மற்றும் துணைக்கோள்கள் தொடர்பாகவும் அமெரிக்கா ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதிலும், குறிப்பாக மற்ற நாடுகளை காட்டிலும் நிலவு தொடர்பான ஆராய்ச்சியில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. நிலவை ஆராய்ச்சி செய்ய பிரத்யேகமான செயற்கைக்கோள்களையும் அவ்வப்போது விண்ணில் செலுத்தி வருகிறது.
ஆர்டெமிஸ் 1 விண்கலம்:
அந்த வகையில் நிலவை ஆய்வு செய்வதற்காக நாசாவின் ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. அதைதொடர்ந்து, 9 நாள் பயணத்திற்குப் பிறகு நவம்பர் 25ம் தேதி முதல் இந்த விண்கலம் சந்திரனை சுற்றி ஆய்வு செய்ததோடு, நிலவின் மிக அருகாமையில் சென்று புகைப்படங்களையும் எடுத்து பூமிக்கு அனுப்பியது. இந்த நிலையில், ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் நிலவை ஆய்வு செய்யும் தனது பணிகளை முடித்துக் கொண்டு, அதன் சுற்றுப்பாதையில் இருந்து வெளியேறி கடந்த வாரம் பூமிக்கு திரும்ப தொடங்கியது.
Artemis I: Or, To the Moon and Back Again. 🚀
— NASA (@NASA) December 10, 2022
Live coverage of our @NASA_Orion spacecraft’s return to Earth will begin at 11am ET (1600 UTC) on Dec. 11, with splashdown in the Pacific Ocean near Guadalupe Island at 12:39pm ET (1739 UTC). Watch it live: https://t.co/7hsnUGlwJs pic.twitter.com/IgcSctF36D
பூமிக்கு திரும்பும் ஆர்டெமிஸ் -1:
பூமியை நெருங்கியுள்ள ஆர்டெமிஸ் 1 செயற்கைக்கோள் இன்று இரவு 11.10 மணிக்கு, பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள குவாடாலூப் தீவு அருகே தரை இறங்க திட்டமிடப்பட்டுள்ளது. விண்கலம் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பும் ஏற்பாடுகளை நாசா செய்து வருகிறது. ஓரியன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு அதன் சேவை தொகுதியில் இருந்து குழு தொகுதி பிரிக்கப்படும். அதிவேகத்தில் தரையிறங்குவதன் மூலம் சேவை தொகுதி பூமியின் வளிமண்டலத்திலேயே எரிந்துவிடும். விண்கலத்தின் மீதமுள்ள பாகங்கள் நிலம், மக்கள் மற்றும் கப்பல் வழித்தடங்களுக்கு எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாத வகையில் அது பூமிக்கு திரும்ப நாசா திட்டமிட்டுள்ளது. சேவைத் தொகுதியில் இருந்து பிரிந்த பிறகு ஓரியன் குழு தொகுதி விண்கலத்தை, பாராசூட் உதவியுடன் 'ஸ்கிப் என்ட்ரி' நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பாக தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆர்டெமிஸ் விண்கலத்தின் எதிர்காலம்:
அடுத்தடுத்து செயல்படுத்த உள்ள ஆர்டெமிஸ் செயற்கைக்கோளின் திட்டங்களுக்கு, ஆர்டெமிஸ் - 1 செயற்கைக்கோளின் செயல்பாடு நாசாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் அனுபவத்தின் அடிப்படையிலேயே, விண்வெளி வீரர்களை சுமந்துகொண்டு செல்லும் ஆர்டெமிஸ் - 2 விண்கலத்தை 2024ம் ஆண்டும், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கக்கூடிய ஆர்டெமிஸ் - 3 விண்கலத்தை 2025ம் ஆண்டும் விண்ணில் செலுத்த நாசா முடிவு செய்துள்ளது.