Washington Burger Competition : புரோட்டா சூரியை பார்த்திருப்பீங்க... பர்கர் சூரி தெரியுமா? 10 நிமிடத்தில் 34 காலி!
அமெரிக்காவின் வாஷிங்கடன் மாகாணத்தில் நடைபெற்ற பர்கர் சாப்பிடும் போட்டியில் இருவர் தலா 34 பர்கர்களை 10 நிமிடத்தில் சாப்பிட்டு வெற்றி பெற்றனர்.
வெளிநாடுகளில் ஆண்டுதோறும் வினோதமான போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதிக உயரத்தில் இருந்து குதிப்பது. ஸ்கை டைவிங் அடிப்பது, அதிக தூரம் நீந்துவது போன்ற சாகச விளையாட்டுகளுக்கு மத்தியில் சாப்பிடுவது, தூங்குவது, மது அருந்துவது போன்ற வித்தியாசமான போட்டிகளும் வெளிநாடுகளில் சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றாகும்.
இந்த வகையில், அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான வாஷிங்டனில் வித்தியாசமான போட்டி ஒன்று நடைபெற்றது. தமிழில் வெளியான ‘வெண்ணிலா கபடிக்குழு’ என்ற திரைப்படத்தில் யார் 50 பரோட்டாக்களை சாப்பிடுகிறார்கள் என்ற போட்டி நடைபெறும். அதில் சூரி பங்கேற்று மிகவும் எளிதாக வெற்றி பெறுவார். இந்த நகைச்சுவை தமிழ்நாடு முழுவதும் மிகவும் பிரபலமான நகைச்சுவை ஆகும்.
இதே பாணியில், வாஷிங்டனில் நடத்தப்பட்ட போட்டியில் யார் அதிக பர்கர் சார்ப்பிடுகிறார்கள் என்ற போட்டி நடைபெற்றது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த போட்டியில் மொத்தம் 14 பேர் பங்கேற்றனர். போட்டியாளர்கள் முன்பாக ஒரு அட்டைப்பெட்டி நிறைய பர்கர்களும். ஏராளமான தண்ணீர் கேன்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
போட்டி ஆரம்பித்தவுடன் அனைத்து போட்டியாளர்களும் தங்கள் முன்வைக்கப்பட்டு இருந்த பர்கர்களை விறுவிறுவென்று சாப்பிட ஆரம்பித்தனர். பலரும் பர்கர்களை விழுங்கினால் போதும் என்று வேகமாக விழுங்கத் தொடங்கினர்.
இவர்களில் கலிபோர்னியாவைச் சேர்ந்த மோல்லி சைலர் மற்றும் பென்சில்வேனியாவைச் சேர்ந்த டான் கில்லர் கென்னடி என்ற இரு போட்டியாளர்கள் மட்டும் மற்ற போட்டியாளர்கள் யாரும் நெருங்க முடியாத வகையில் விறுவிறுவென்று பர்கர்களை சாப்பிட்டனர். இவர்கள் இருவர் மட்டும் 10 நிமிடங்களில் 34 பர்கர்களை சாப்பிட்டு அசத்தினர்.
மொத்தம் 10 நிமிடங்கள் மட்டுமே கொண்ட இந்த போட்டியில் மோல்லி சைலரும், டான் கில்லர் கென்னடியும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் பர்கர் சாப்பிட்டனர். இறுதியில் இருவருமே போட்டி நேரம் முடிந்தபோது 34 பர்கர்கள் சாப்பிட்டதால் இருவருமே வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இதில் டான் கெல்லர் கென்னடியுடன் பட்டத்தை பகிர்ந்து கொண்ட மோல்லி சைலர் நான்கு குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது. நம்ம ஊரில் புரோட்டா மாதிரி தான் அங்கு பர்கர். அதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்ல. அதை எளிதில் கடித்து சாப்பிடுவதே சிரமம். அடைக்கும். ஆனால் அதையும் அங்கு சூரி போல அடித்து நொறுக்கி உள்ளே தள்ளி பரிசை வென்ற அந்த ஊர் ‛சூரி’யை மக்கள் கொண்டாடித் தீர்க்கின்றனர். எது எப்படியோ அவரது வயிறும் நிறைந்தது, பரிசால் பாக்கெட்டும் நிறைந்தது. திரையில் சூரியை பார்த்த நமக்கு நிஜயத்தில் இந்த பர்கர் சூரியை பார்ப்பதும் ஒரு விதமாக வினோத மனநிலையையே தருகிறது. அதனால் தான் அவரை அங்கு ஒரு தரப்பினர் கொண்டாடுகின்றனர்.