Afghanistan : திருடிய குற்றத்திற்காக 4 பேரின் கைகளை வெட்டிய கொடூரம்.... தலிபான்களின் உச்சக்கட்ட தண்டனை...
ஆப்கானிஸ்தானில் திருடிய குற்றத்திற்காக 4 பேரின் கைகளை தலிபான்கள் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Afghanistan : ஆப்கானிஸ்தானில் திருடிய குற்றத்திற்காக 4 பேரின் கைகளை தலிபான்கள் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை கவிழ்த்து தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அவர்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் அந்த நாட்டில் ஏராளமான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க ஆதரவு அரசு அமைவதற்கு முன்பு தலிபான்கள் ஆட்சி செய்தபோது இருந்த கடும் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருவது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியது. விதிக்கப்பட்டு வரும் பிற்போக்கான விதிகள் காரணமாக அந்த நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக, பெண்களுக்கு எதிராக கொண்டு வரப்படும் மோசமான கட்டுப்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதற்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்திருந்தது. தலிபான் அரசின் நடவடிக்கை உலக அளவில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தலிபான்கள் கொடூர தண்டனை
இதை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து உள்ளுர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களில் பெண்களை பணியில் அமர்த்துவதை நிறுத்த வேண்டும் என தலிபான் அரசு அறிவித்தது. இது நிலைமையை மேலும் மோசமாக்கியது. இப்படி, பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கொடூரமாக ஒரு சம்பவத்தை தலிபான்கள் நடத்தியது அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது.
அதன்படி, ஆப்கானிஸ்தான் காந்தஹாரில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் ஏராளமான மக்கள் முன்னிலையில் திருட்டு குற்றச்சாட்டின் பேரில் தலிபான்கள் ஒன்பது பேரை கடுமையாக அடித்து, அவர்களில் நால்வரின் கைகளை வெட்டினர். மேலும், பல்வேறு குற்றங்களுக்காக கால்பந்து மைதானத்தில் ஒன்பது பேர் அடிக்கப்பட்டதாக ஆளுநர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹாஜி ஜைத் தெரிவித்து உள்ளார்.
ஆப்கானிஸ்தான் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை சந்தித்து வருகிறது. வேலையின்மை, பசி, பட்டினி, நோய் என பல பிரச்சனைகள் அங்கு தலைவிரித்து ஆடிவரும் நிலையில், இதுபோன்ற சம்பங்கள் நடைபெறுவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சரும், இங்கிலாந்தில் உள்ள அகதிகளுக்கான அமைச்சருமான ஷப்னம் நசிமி கூறுகையில்,
The Taliban have reportedly cut off the hands of 4 people in a football stadium in Kandahar today, accused of theft, in front of spectators.
— Shabnam Nasimi (@NasimiShabnam) January 17, 2023
People are being lashed, amputated & executed in Afghanistan, without fair trial and due process.
This is a human rights violation. pic.twitter.com/vLcjCOTOM5
”காந்தஹாரில் உள்ள கால்பந்து மைதானத்தில் பார்வையாளர்கள் முன்னிலையில் திருட்டு குற்றச்சாட்டில் தலிபான்கள், நான்கு பேரின் கைகளை வெட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த வேண்டும். மேலும், முறையான நடைமுறையின்றி ஆப்கானிஸ்தானில் மக்கள் தாக்கப்பட்டு, தூக்கிலிடப்படுகிறார்கள். இத்தகைய செயல் மனித உரிமை மீறல்,” என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.