Ecuador: ஈகுவடார் அதிபர் வேட்பாளர் ஃபெர்னாண்டோ சுட்டுக்கொலை.. அவசர நிலை பிரகடனம்..
ஈகுவடார் நாட்டில் அதிபர் வேட்பாளர் ஃபெர்னாண்டோ விலாவிசென்சியோ சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அந்நாட்டில் 60 நாட்களுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது...
![Ecuador: ஈகுவடார் அதிபர் வேட்பாளர் ஃபெர்னாண்டோ சுட்டுக்கொலை.. அவசர நிலை பிரகடனம்.. A 60-day state of emergency has been declared in Ecuador following the shooting death of presidential candidate Fernando Villavicencio. Ecuador: ஈகுவடார் அதிபர் வேட்பாளர் ஃபெர்னாண்டோ சுட்டுக்கொலை.. அவசர நிலை பிரகடனம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/11/f98a7cf3519ebca3ff3a807c16b85a5a1691725051644109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஈகுவடார் நாட்டில் அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ விலாவிசென்சியோ தேர்தல் பிரசாரத்தின்போது துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்காவின் வடமேற்கு திசையில் ஈகுவடார் என்ற நாடு உள்ளது. அங்கு வரும் 20-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த 8 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்னும் சில நாட்களில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அங்கு இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈகுவடார் தலைநகரில், build Ecuador moment என்ற கட்சி சார்பில் ஃபெர்னாண்டோ விலாவிசென்சியோ அதிபர் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.
அவர் தனது பிரச்சாரத்தை முடித்து விட்டு பிரச்சார வாகனத்தில் ஏற முயற்சி செய்தபோது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நாட்டின் எல்லையாக மேற்கு பகுதியில் பசிஃபிக் பெருங்கடல் உள்ளது. இங்கு போதைப்பொருள் கடத்தல் அதிகளவில் நடக்கிறது. மேலும் வன்முறைகளுக்கு பெயர் பெற்ற நாடாக ஈகுவடார் மாறியுள்ளது. நேற்று நடந்த சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
அவரது இறப்பிற்கு தற்போதைய அதிபர் கில்லர்மோ லாஸ்ஸோ, “ஜனாதிபதி வேட்பாளர் ஃபெர்னாண்டோ வில்லவிசென்சியோவின் படுகொலையால் அதிர்ச்சி அடைந்துள்ளேன். அவரது மனைவி மற்றும் மகள்களுக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது நினைவிற்காகவும், அவரது போராட்டத்திற்காகவும் மரியாதை செலுத்தும் விதமாக, குற்றம் புரிந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், கண்டனத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளனர். அதேபோல் இந்த சம்பவத்தால் தேர்தல் தடைப்பட்டாது என்றும், திட்டமிட்டப்படி தேர்தல் நடைபெறும் என்றும் அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த 60 நாட்களுக்கு அவசர நிலை அமலில் இருக்கும் என்றும், எந்த அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கவும், மக்களின் பாதுகாப்பு கருதியும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் அமைதி காத்திட அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் அந்நாட்டு அதிபர் கில்லர்மோ லாஸ்ஸோ தலைமையில் இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
ஃபெர்னாண்டோ விலாவிசென்சியோவை சுட்டுக்கொலை செய்தது யார்? இதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து அந்நாட்டு விசாரணை அமைப்பு விசாரணை தொடங்கி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)