ரூ. 6 கோடி பள்ளி நிதியை திருடி சூதாடிய கன்னியாஸ்திரி… தண்டனை என்ன தெரியுமா?
"நான் பாவம் செய்துவிட்டேன், நான் சட்டத்தை மீறிவிட்டேன், எனக்கு மன்னிப்பே கிடையாது. எனது குற்றங்களால் சபதம், கட்டளைகள், சட்டம் அனைத்தையும் விட என் மீது பலர் வைத்திருந்த புனித நம்பிக்கையை மீறி விட்டேன்"
கலிபோர்னியாவில் கன்னியாஸ்திரி ஒருவர் சூதாடுவதற்காக பள்ளி நிதியிலிருந்து பல கோடிகளை திருடியுள்ளார். சூதாடுவதையும், திருடுவதையும் பத்து கட்டளைகளுக்குள் ஒன்றாக வைத்து எதிர்க்கிறது பைபிள். அந்த மதத்தின் கன்னியாஸ்திரியாக இருந்து பள்ளியின் நிதி பணத்தை திருடி சூதாடிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவைச் சேர்ந்த 80 வயதான மேரி மார்கரெட் க்ரூப்பர் என்ற கன்னியாஸ்திரி, செயின்ட் ஜேம்ஸ் கத்தோலிக்க பள்ளியில் முதல்வராக 10 ஆண்டுகளாக பணியில் இருந்துள்ளார். அந்த சமயத்தில், சொகுசு வாழ்க்கைக்கு ஆசை பட்டு, தனது சூதாடும் பழக்கத்திற்காக பள்ளி நிதியில் இருந்து பணம் திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
கல்வி மற்றும் தொண்டு செய்வதற்காக நன்கொடை நிதியாக கொடுக்கப்பட்ட பணத்தில் இருந்து 835,000 டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 6 கோடியே 23 லட்சம் ரூபாயை எடுத்துள்ளார். பள்ளிக்கு அனுப்பப்படும் பணத்தை தனது ரகசிய வங்கி கணக்கு அனுப்பி, அதனை தனது ஆடம்பர செலவிற்கு பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பள்ளி நிதியில் இருந்து எடுத்த பணத்தைக் கொண்டு சூதாட்டத்திற்கும், கோடை காலங்களில் சுற்றுலா பயணிகள் தங்கும் லேக் தஹோ என்ற ரிசார்ட்டில் தங்குவதற்கும், குளிர்காலத்தில் பனிச்சறுக்கு போன்ற ஆடம்பரமான சொகுசு பயணத்திற்கும் பயன்படுத்தியுள்ளார்.
பள்ளி நிதியை எடுத்து செலவு செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது, கடவுள் சேவைக்காக தன்னை அர்ப்பணித்த கன்னியாஸ்திரிக்கு எதற்காக இவ்வளவு பணம் என்று கேட்ட கேள்விக்கு மார்கரெட், "நான் பாவம் செய்துவிட்டேன், நான் சட்டத்தை மீறிவிட்டேன், எனக்கு மன்னிப்பே கிடையாது. எனது குற்றங்களால் சபதம், கட்டளைகள், சட்டம் அனைத்தையும் விட என் மீது பலர் வைத்திருந்த புனித நம்பிக்கையை மீறி விட்டேன்” என வாக்குமூலம் அளித்துள்ளார். க்ரூப்பரின் வழக்கறிஞர் மார்க் பைர்ன் கூறுகையில், "அவர் சூதாட்டத்திற்கு அடிமையானவர். இது ஒரு விளக்கம் மட்டுமே. அவர் செய்த எந்த தவறுகளையும் மறைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
மார்கரெட் க்ரூப்பர் பல ஆண்டுகளாக ஒரு நல்ல ஆசிரியராக இருந்துள்ளதை சுட்டிக்காட்டிய மாவட்ட நீதிபதி ஓடிஸ் டி ரைட் , தற்போது அந்த பாதையில் இருந்து முற்றிலும் விலகிச்சென்றுவிட்டதாக வேதனை தெரிவித்தார். “நீங்கள் செய்த தவறை புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன், குறைந்தபட்சம் அதையாவது நீங்கள் செய்வீர்கள் என நம்புகிறேன்” என மார்கரெட்டுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கில் கன்னியாஸ்திரி மார்க்ரெட் க்ரூப்பருக்கு 12 மாதங்கள் மற்றும் ஒரு நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 8 லட்சம் அமெரிக்க டாலர்களை திரும்ப செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.