குறைபாட்டுடன் பிறந்ததால் நீதிமன்றம் சென்று டாக்டரிடம் இழப்பீடு பெற்ற வீராங்கனை!
குழந்தையின் தண்டுவட பாதிப்பை குறைக்க உதவும் 'போலிக் அமிலம்' அடங்கிய ஊட்டச்சத்து உணவுகளை உண்ணும்படி, எங்கள் குடும்ப டாக்டர் மிட்சல் பரிந்துரைத்திருக்க வேண்டும்.
நம்மை சுற்றி வெவ்வேறு விஷயங்கள் வெவ்வேறு மனிடதர்களிடையே நடந்து கொண்டே இருக்கின்றன. உலகெங்கும் உள்ள மனிதர்களால் நிகழ்த்தப்படுகின்ற பல விஷயங்கள் நம்மை சட்டென திரும்பி பார்க்க வைக்கும். அதுவும் முக்கியமாக நீதி மன்றங்களில் விவாதிக்கப்படும் சில வழக்குகளும், அவற்றிற்கு நீதி மன்றம் வழங்கும் தீர்ப்புகளும் சில சமயம் விசித்திரமாக அமையும். அப்படி பிரிட்டனைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனை, தன்னை பிறக்க வைத்த குற்றத்திற்காக குடும்ப டாக்டர் மீது வழக்கு தொடுத்து, பல கோடி ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளார்.
20 வயதாகும் ஐரோப்பாவைச் சேர்ந்த இவி டூம்பஸ் என்பவர்தான் அந்த வழக்கை தொடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறார். அவர் தற்போது பிரிட்டனில் வசித்து வருகிறார். குதிரையில் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்கும் இவி டூம்பஸ், 'ஸ்பைன் பிபிடா' எனப்படும் தண்டு வட நோய் பாதிப்பிற்கு ஆளானார். சில சமயம் நாள் முழுதும் நகர முடியாமல் ஒரே இடத்தில் இருக்கும்படியாக ஆகி போகுமாம், அப்போதெல்லாம் உடலில் குழாய்களை பொருத்தி படுக்கையிலேயே இருந்து வாழ்க்கையை கழித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் லண்டன் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இவி டூம்பஸ், லண்டன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு உள்ளது என்னவென்றால், "என் தாய் கருவுற்று இருந்த போது இந்த பாதிப்பு எனக்கு என் தாயின் வயிற்றுக்குள் ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கு பொதுவாக தண்டுவட பாதிப்பு வருவதற்கு கருவுற்ற காலத்தில் தாய் உண்ணும் உணவு மற்றும் மருந்துகளை பொறுத்து மாற்றம் அடையும். அதனை கண்டறிந்து சொல்ல வேண்டியது ஒரு மருத்துவரின் கடமை. குழந்தையின் தண்டுவட பாதிப்பை குறைக்க உதவும் 'போலிக் அமிலம்' அடங்கிய ஊட்டச்சத்து உணவுகளை உண்ணும்படி, எங்கள் குடும்ப டாக்டர் மிட்சல் பரிந்துரைத்திருக்க வேண்டும். அவ்வாறு கூறியிருந்தால் என் தாய் கருவை கலைத்திருப்பார் அல்லது போலிக் அமில ஊட்டச்சத்து உணவுகளை உண்டு, குழந்தையின் தண்டுவட பாதிப்பை குறைத்திருப்பார். அவ்வாறு டாக்டர் அறிவுரை கூறத் தவறியதால் நான் பிறந்து, தற்போது தண்டுவட நோயால் அவதிப்படுகிறேன். எனவே, இந்த குறைபாட்டுடன் நான் பிறக்க காரணமான டாக்டர் மிட்சல், என் வாழ்நாள் பராமரிப்புக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்." இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த லண்டன் உயர் நீதிமன்றம் 'பலவீனமான தாய்க்கு உரிய ஆலோசனை தரத் தவறிய டாக்டரால் நோய் தாக்கத்துடன் இவி டூம்பஸ் பிறந்துள்ளார். அதனால், அவருக்கு அந்த மருத்துவர் இழப்பீடு தர வேண்டும்' என தீர்ப்பளித்துள்ளது. இழப்பீடு குறித்த விபரம் வெளியிடப்படவில்லை. ஆனால், பல கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.