புதுச்சேரியில் ஆஷா பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காதது ஏன்? அதிமுக பரபரப்பு புகார்!
ஆஷா பணியாளர்களுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு உயர்த்தப்பட்ட சம்பளம் இன்று வரை வழங்கப்படாமல் இருப்பது அரசு உயரதிகாரிகளின் சட்டவிரோத செயலாகும் - அதிமுக அன்பழகன்

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சுமார் 250-க்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்கள் குறைந்த சம்பளத்தில் பணி செய்து வருகின்றனர். அவர்களுக்கு சட்டமன்றத்தில் உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்க வேண்டும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சுமார் 250-க்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்கள் குறைந்த சம்பளத்தில் பணி செய்து வருகின்றனர். இவர்கள் கர்ப்பிணிகள் நலன், குழந்தைகள் நலன், மகளிர் உடல் நலன்கள், டி.பி, எச்.ஐ.வி உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் சம்பந்தமாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நேரடி தொடர்பில் உள்ளனர். மாநிலத்தில் திடீரென ஏற்படும் அசாதரணமான சூழ்நிலை காலங்களில் மக்களோடு மக்களாக இருந்து தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வார்கள்.
கொரோனா காலத்தில் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் சுகாதாரத்துறைக்கு துணை இருந்தனர். இவர்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இவர்கள் பெரும் 10,000 ரூபாய் சம்பளத்தை, 8,000 ரூபாய் அதிகமாக உயர்த்தி மாதம் 18,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்தீர்கள். ஒரு மாநிலத்தின் முதலமைச்சரின் சட்டமன்ற அறிவிப்பை செயல்படுத்த வேண்டியது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கடமையாகும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் ஆஷா பணியாளர்களுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு உயர்த்தப்பட்ட சம்பளம் இன்று வரை வழங்கப்படாமல் இருப்பது அரசு உயரதிகாரிகளின் சட்டவிரோத செயலாகும்.
முதலமைச்சர் அவர்களுடைய சட்டமன்ற அறிவிப்பை கிடப்பில் போடும் அளவில் நிதி செயலர், தலைமை செயலர் மற்றும் அத்துறையின் செயலர்கள் இணைந்து இப்பிரச்சனையில் செயல்படுவதாக தெரிகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு மக்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற குறுகிய எண்ணத்தில் மேற்கூறிய அதிகாரிகளின் செயல்பாடு உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்றாகும். சட்டமன்ற பட்ஜெட்டின் போது தாங்கள் அறிவித்தது போன்று ஆஷா பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். இதனால் அரசுக்கு மாதம் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.20 லட்சம் தான் செலவாகும். இது பெரிய தொகையும் அல்ல. இதை வழங்க தடையாக உள்ள அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எடுக்க வேண்டும்.
அங்கன்வாடி பணியிடங்களில் 344 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 274 அங்கன்வாடி உதவியாளர்கள் என 618 பெண்களுக்கான பணியிடங்கள் நிரப்புவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பம் செய்யும் போது குடியுரிமை மற்றும் சாதி சான்றிதழ் அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய மேற்கூறிய குடியுரிமை மற்றும் சாதி சான்றிதழ் அந்தந்த தாலுக்கா அலுவலகங்களில் விண்ணப்பதாரர்கள் கேட்கும் போது அவர்களுக்கு மேற்கூறிய சான்றிதழ்கள் வழங்கப்படாமல் மறுக்கப்படுகின்றன.
மேற்கூறிய பணிகளுக்கு நீங்கள் தேர்வான பிறகு இந்த சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என வருவாய் துறை அதிகாரிகள் கூறி விண்ணப்பதாரர்களை திருப்பி அனுப்புகின்றனர். அங்கன்வாடி பணிகளுக்கு விண்ணப்பம் செய்யும் போதே குடியுரிமை சாதி சான்றிதழ் சமர்ப்பிக்காத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என சம்பந்தப்பட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் அதிகாரிகள் கூறுகின்றனர். ஒரு பணிக்கு விண்ணப்பம் செய்யும் போதே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சான்றிதழ் சமர்ப்பிப்பது சம்பந்தமாக இருவேறு கருத்துக்களை வாய்மொழியில் தெரிவித்துக்கொண்டு விண்ணப்பதாரர்களுக்கு மன உளைச்சலை அளிக்கின்றனர். இதிலும் முதலமைச்சர் அவர்கள் அரசு துறை அதிகாரிகளுக்கு சரியான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்





















