Villupuram: உளுந்தூர்பேட்டை பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி? - புலம்பும் மக்கள்
உளுந்தூர்பேட்டை பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி. பாதிக்கப்பட்டவர்கள் டிஐஜியிடம் புகார் மனு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா சேந்தநாடு, நடியப்பட்டு, ஒல்லியம்பாளையம், கூ.கள்ளக்குறிச்சி, ஆரியநத்தம், இலவத்தடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
சேந்தநாடு கிராமத்தில் பாலகிருஷ்ணன் மனைவி வள்ளி, கிருஷ்ணமூர்த்தி மகன் கிருஷ்ணதாஸ், ராமசாமி மகன் சுரேஷ் ஆகிய 3 பேர் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். அதுமட்டுமின்றி இவர்கள், மகளிர் குழு நடத்தி வருவதாகவும் அக்குழு மூலம் வங்கி கடன் வாங்கித்தருவதாகவும் கூறியுள்ளனர். இதை நம்பிய நாங்கள், அவர்கள் 3 பேரிடமும் சென்று ஏலச்சீட்டில் சேர்ந்து மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தோம். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மாதந்தோறும் நாங்கள் தவறாமல் பணம் செலுத்தினோம். ஒவ்வொருவரும் குறைந்தது ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் சீட்டில் சேர்ந்து பணம் செலுத்திய நிலையில் தவணைக்காலம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை தராமல் அவர்கள் காலம் தாழ்த்தி வந்தனர்.
நாங்கள் அவர்கள் 3 பேரிடமும் சென்று பணத்தை கேட்டு தொடர்ந்து வற்புறுத்தி வந்தோம். அதற்கு அவர்கள், பணம் கேட்டு தொந்தரவு செய்தால் கொலை செய்து விடுவதாக எங்களை மிரட்டினார்கள். இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் அவர்களது வீட்டுக்கு சென்று நாங்கள் பணம் கேட்டு தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எங்களுடைய பணத்தை ஏமாற்றி மோசடி செய்துவிட்டு 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். எங்கள் 70 பேரிடம் ரூ.1 கோடி வரை பணம் வசூலித்துக்கொண்டு அவர்கள் மோசடி செய்துவிட்டனர். எனவே அவர்கள் 3 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்