விக்கிரவாண்டியில் பரபரப்பு: திமுக எம்எல்ஏவை ரவுண்டு கட்டிய பொதுமக்கள்- என்ன காரணம்?
விக்கரவாண்டி அருகே கிராமசபை கூட்டத்தில், அடிப்படை வசதி இல்லை என திமுக எம்.எல்.ஏ புகழேந்தியிடம் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெறுவதால் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால் பணியாளர்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்க முடியவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி. சாலை கிராமத்தில் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள் தார்ச்சாலை அமைத்து தரவும், மின்சாரம் தடையின்றி வழங்கவும், 20 ஆண்டுகளாக மாற்று இடம் வழங்கப்பட்ட பத்து குடும்பங்களுக்கு இலவச மனை பட்டா வழங்க வேண்டுமெனவும், நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினர்.
இதனையடுத்து கிராம சபை கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ புகழேந்தி, மக்கள் கோரிக்கைகள் அனைத்து நிறைவேற்றி தரப்படும் என்றும் விக்கிரவாண்டி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட்ட போது அதிக வாக்குகள் பெற்று தந்த ஊராட்சி என்பதால் இந்த ஊராட்சிக்கு நான் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்து எப்போதும் இந்த ஊராட்சி மக்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன் எனவும் கூறினார்.
மேலும் தமிழகத்தில் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியை ஸ்டாலின் செய்து வருவதால் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை என்பதால்தான் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி புரிந்தவர்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டினார்.
கிராமசபைக் கூட்டத்தில் முதல்வர் உரை
இதற்கிடையே தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ’’மக்கள் அதிகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் 4 கிராம சபை கூட்டங்களை 6 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று உரைத்த காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதி நடைபெற உள்ள கிராமசபை கூட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்.
பொதுமக்கள் அதிக அளவில் கலந்துகொள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திடும்வகையில் கிராமசபை கூட்ட அழைப்பிதழ் ஒன்று வடிவமைக்கப்பட்டு, ஊராட்சிகளில் இல்லம்தோறும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக உரையாற்றுகிறார். கிராமசபை கூட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி குறும்பட உரையின் மூலம் தொடங்கி வைத்து, கிராமசபை குறித்த கருத்துகளை தெரிவிக்க உள்ளார். அமைச்சர்கள், தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் கலந்துகொள்வர். கிராமசபை கூட்டத்துக்கான உத்தேச பொருட்கள் அடங்கிய வழிகாட்டுதல்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் அனைத்து ஊராட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன’’. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டிவனத்தில் தனியார் நிதி நிறுவன நெருக்கடியால் பெண் தற்கொலை- உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார்