"காசு குடுத்தா தான் வேல நடக்கும்" ரவுண்டு கட்டிய லஞ்ச ஒழிப்புதுறை... சிக்கிய சார்பதிவாளர்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்ய அதிகாரிகள் லஞ்சப்பணம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
விழுப்புரம்: மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.1.20 லட்சம் சிக்கியது.
சார்பதிவாளர் அலுவலகம்
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு மயிலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பத்திரப்பதிவு செய்ய வருவார்கள். இதனால் தினந்தோறும் பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.
இந்த அலுவலகத்திற்கு பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் அங்குள்ள அதிகாரிகள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக லஞ்சப்பணம் வாங்குவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
இதையடுத்து நேற்று மாலை 6 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு அழகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சக்கரபாணி மற்றும் போலீசார், மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கு சார்பதிவாளர் மற்றும் அலுவலக ஊழியர்கள், இவர்களை தவிர இடைத்தரகர்களும் மற்றும் பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் சிலரும் இருந்தனர். உடனே அவர்கள் யாரும் அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லாதவாறு கதவுகளை உள்புறமாக தாழிட்டுக்கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையை தொடங்கினர்.
அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையாகவும் மற்றும் அங்குள்ள பீரோக்களை திறந்து பார்த்தும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி காலையில் இருந்து மாலை வரை யார், யார் பத்திரப்பதிவு செய்ய வந்துள்ளனர், எத்தனை பேர் வந்தனர், அவர்களில் எவ்வளவு பேருக்கு பத்திரப்பதிவு நடந்துள்ளது என்பது குறித்த விவரங்களை சேகரித்து அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கணக்கில் வராத பணம் சிக்கியது
சுமார் 4 மணி நேரமாக நடந்த இந்த சோதனையின்போது அலுவலகத்தில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்துக்கு அதிகாரிகள் உரிய கணக்கு காண்பிக்காததால் கணக்கில் வராத அந்த பணத்தை போலீசார் கைப்பற்றினர். அவற்றுடன் சோதனையை முடித்துக்கொண்டு வெளியே வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றனர். மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சார்பதிவாளர் அலுவலகங்களையே குறிவைத்து சோதனை
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்ய அதிகாரிகள் லஞ்சப்பணம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் கடந்த சில மாதங்களாக, சார்பதிவாளர் அலுவலகங்களையே குறிவைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 3 மாதங்களில் மட்டும் விழுப்புரம் இணை சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் திண்டிவனம், வானூர், மரக்காணம், கண்டாச்சிபுரம், வளவனூர் உள்ளிட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்ததோடு லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சார்பதிவாளர் அலுவலகங்களையே லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்து அதிரடி சோதனை நடத்தி வருகிறபோதிலும் அதிகாரிகள் உஷாராகாமல் தொடர்ந்து கைநீட்டுவதையே வழக்கமாக கொண்டுள்ளதால் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் மயிலம் சார்பதிவாளர் அலுவலகமும் சிக்கியுள்ளது.