Villupuram: சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சு கருத்தரங்கம்
சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களிடையே பேச்சு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி மற்றும் விழுப்புரம் தூய இருதய கான்வென்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களிடையே பேச்சு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.
சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடும் வகையில் சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தின் மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி மற்றும் பள்ளிகளில் சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்துகொண்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பேரவை தலைவர் அவர்கள் கையொப்பமிட்ட சான்றிதழ்களும், சிறந்த பேச்சாளர்களாக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு பரிசு தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டந்தோறும் நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெற்று முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு கடைசியாக மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படும்.
இப்போட்டியில் வெற்றிபெறுவோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருக்கரங்களால் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கருத்தரங்கம் இன்று தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியிலும், அதனை தொடர்ந்து, பள்ளி மாணவ மாணவியர்களிடையே கருத்தரங்கம் விழுப்புரம் தூய இருதய காண்வென்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சட்டமன்ற செயல்பாடுகள் மற்றும் அவர் நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் குறித்து தங்களின் பேச்சாற்றல் மூலம் எடுத்துரைத்தனர். பேச்சு கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும், கல்லூரி அளவில் முதல் மூன்று மாணவ, மாணவிகளுக்கும், பள்ளி அளவில் முதல் மூன்று மாணவ, மாணவிகளுக்கும் பரிசுத்தொகையுடன் சான்றிதழ்களையும் விழாக்குழு இணைத்தலைவர் மற்றும் சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி வழங்கினார்.
சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி தெரிவிக்கையில்,
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையிலும், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், நல்லாட்சி புரிந்த காலத்தில், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்குமான பல்வேறு சிறப்புத் திட்டங்களை சட்டமன்றத்தில், அறிவித்து செயல்படுத்தினார்கள். அத்தகைய திட்டங்களால் தமிழ்நாடு எவ்வாறு பொருளாதார முன்னேற்றம் காணப்பெற்றது என்பதை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து பயன்பெற வேண்டும் எனவும், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் சிறப்பு மிக்க பேச்சாற்றல், எழுத்தாற்றல் மற்றும் செயலாற்றல் திறனை அறிந்து, தாங்களும் தங்களுடைய திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே சட்டமன்ற நாயகர் கலைஞர் விழா கருத்தரங்கம் நடத்திட முடிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில், சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் சட்டமன்ற செயலகத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலைஞர் அவர்களின் சட்டமன்ற செயல்பாடுகளையும் அவர் முதலமைச்சராக சட்டமன்றத்தில் கொண்டுவந்த சமூக சீர்திருத்த திட்டங்கள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் பேச்சு கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்றைய தினம், விழுப்புரம் மாவட்டத்தில், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி மற்றும் விழுப்புரம் தூய இருதய காண்வென்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற நாயகர் - கலைஞர் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.
டாக்டர் கலைஞர் அவர்கள், சட்டமன்ற கூட்டத்தொடரில், மகளிர்கள், ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், மாணவ, மாணவியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தினார்கள். இத்தகைய திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில், துறை சார்ந்த உயர் அலுவலர்களிடம் அவ்வப்பொழுது ஆய்வுக்கூட்டம் நடத்தியும், நேரில் ஆய்வு மேற்கொண்டதன் காரணமாகவே, தமிழ்நாடு அனைத்துத்துறைகளிலும் சிறந்து விளங்கியது.
தாய்மொழி தமிழ்மீது மிகுந்த பற்று கொண்டு, தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு பல்வேறு சிறப்புகளை செய்துள்ளார்கள். அதன்காரணமாகவே, தமிழ் மொழி செம்மொழி என்ற அந்தஸ்தினை பெற்று உலகம் முழுவதும் தமிழ்மொழி சிறந்தமொழியாக விளங்கி வருகிறது. மேலும் அவர் நிறைவேற்றிய சட்டங்களும், திட்டங்களும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை அடிப்படையாக கொண்டிருந்தது. இந்தியாவில் எந்த ஒரு முதலமைச்சரும் இதுபோன்ற சிறப்பான திட்டங்களை நிறைவேற்றினார்களா என்றால் அது கேள்விகுறிதான். இந்தியாவில் உள்ள பல மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது எனத் தெரிவித்தார்.