ரூ.161 கோடி மதிப்பில் கட்டப்பட்டு திறக்கப்படாத தடுப்பணை உடைப்பு... மரக்காணத்தில் பரபரப்பு
மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் தடுப்பு கரை அமைக்க வனத்துறையினர் தடை ; விவசாயிகள் நலன் கருதி ரூ.161 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பு அணையை உடைக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சதுப்பு நிலப்பகுதி அமைந்துள்ளது. இந்த சதுப்பு நிலப்பகுதியில் மரக்காணம் பகுதியில் இருந்து ஆந்திரா மாநிலத்தில் உள்ள காக்கிநாடா வரை பக்கிங்காங் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் ஆண்டு முழுக்க தண்ணீர் நிரம்பி இருக்கும். இந்த தண்ணீரை பயன்படுத்தி பல ஆண்டுகளுக்கு முன் கால்வாயின் அருகில் இருக்கும் கிராம மக்கள் தங்களது விலை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சியுள்ளனர். இந்நிலையில் பருவ கால மாற்றத்தின் காரணமாக கடல் நீர் பக்கிங்காம் கால்வாயில் கலந்துள்ளது.
இதனால் இந்த கால்வாயில் இருந்த நீர் உப்புநீராக மாறாமல் தடுக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட காக்காபாளையம் கிராமத்திற்கும் கந்தாடு ஊராட்சிக்குட்பட்ட முதலியார் பேட்டை கிராமத்திற்கும் இடையே பக்கிங்காம் கால்வாயில் தடுப்பு அணை கட்டி உள்ளனர். ஆங்கிலேயருக்குப் பிறகு இந்த அணையை முறையாக பராமரிக்கவில்லை. இதன் காரணமாக இந்தத் தடுப்பணை முற்றிலும் சிதலம் அடைந்து விட்டது. இதனால் கடல் நீர் கால்வாயில் கலந்ததால் பக்கிங்காங் கால்வாய் முழுவதும் உப்பு நீராக மாறிவிட்டது.
இதன் காரணமாக இந்த கால்வாயில் இரண்டு பக்கமும் இருந்த விலை நிலங்களும் பயிர் செய்ய முடியாத அளவிற்கு உவர் நிலமாக மாறிவிட்டது. இதுபோல் நிலத்தடி நீர்மட்டமும் உப்பு நீராக மாறியது. பக்கிங்காம் கால்வாயில் புதிதாக தடுப்பணை அமைக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் மற்றும்பொதுமக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்று அரசு கடந்த ஆண்டு ரூ.161 கோடி மதிப்பில் தடுப்பு அணையைகட்டி முடித்தது. இதனைத் தொடர்ந்து அருகில் இருக்கும் விவசாய நிலங்கள் பாதிக்காமல் இருக்கும் வகையில் அணை கட்டப்பட்டுள்ள இடத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாயில் இரண்டு பக்கமும் மணலைக் கொட்டி தடுப்பு கரை அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்தது.
இதனால் அணையில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்திற்கு மணலைக் கொட்டி தடுப்பு கரை அமைக்கும் பணியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனைப் பார்த்த வனத்துறையினர் நீங்கள் சுற்றுக்கரை அமைக்கும் இடம் எங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் எந்தப் பணியும் செய்யக்கூடாது என கடந்த ஆண்டு தடுத்து விட்டனர்.
இதனால் சுற்றுக்கரை அமைக்கும் பணி முழுமை அடையாமல் இன்று வரையில் உள்ளது. அணைப்பகுதியில் சுற்றுக்கரை அமைக்காததால் பருவமழை காலத்தில் அதிகப்படியாக வரும் வெள்ள நீரானது அருகில் இருக்கும் விவசாய நிலங்களில் புகுந்து பாதிப்புகளை உண்டாக்குகிறது.
இதனால் விவசாய நிலத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க சுற்றுக்கரை அமைக்க வேண்டும் என விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் சுற்றுக்கரை அமைக்க வனத்துறையினர் ஒத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் தற்பொழுது வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது.
இந்த மழையினால் கால்வாயின் அருகில் இருக்கும் விவசாய நிலம் மற்றும் பாதிக்கப்படாமல் இருக்க பக்கிங்காங் கால்வாயில் புதிதாக கட்டப்பட்டிருந்த அணையின் இரண்டு மதகு ஷட்டர்களை உடைத்து கால்வாயில் வரும் மழைநீரானது உடனடியாக கடலில் கலக்கும் வகையில் பொதுப்பணித்துறையினர் இரண்டு இடங்களில் அணையை உடைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் பகுதியில் ஏன் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய தடுப்பு அணை கட்டினார்கள்? ஏன் அணை கட்டப்பட்டு ஒரு ஆண்டிற்குள் அந்த அணையை உடைக்கிறார்கள் எந்த விபரம் தெரியாமல் அனைய உடைப்பதை பார்க்கும் பொதுமக்கள் வேதனையுடன் கூறி செல்கின்றனர். இங்கு உடைக்கப்படும் தடுப்பு அணை மீண்டும் கட்டப்படுமா? அல்லது சுற்றுக்கரை அமைக்கும் பணி போல் பாதியிலேயே நிறுத்தப்படுமா? என்பதே இப்பகுதி பொதுமக்களின் கேள்வி.