விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைப்பதற்க்கு எதிர்ப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்வதாக கூறி அதனை எதிர்த்து கிராம மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்வதாக கூறி அதனை எதிர்த்து கிராம மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 25 க்கும் மேற்பட்ட கிராமங்கள் தற்பொழுது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. இந்த கிராமங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 25 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். இதுகுறித்து பெரியசெவலை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமார் கூறுகையில், “அரசூர் திருவெண்ணைநல்லூர் குரு வட்டங்களை சேர்ந்த 25 கிராமங்கள் தற்பொழுது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. இது மக்கள் அனுமதி பெற்று விழுப்புரம் மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட கிராமங்கள். தற்பொழுது அரசியல் சுயலாபத்திற்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இதை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” என்று தெரிவித்தார்.
ஆட்சியரிடம் புகார் மனுவில்....
தமிழக சட்டமன்றத்தில் விழுப்புரம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் பேரில் கடந்த 2020ல் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு பல கட்டமாக இரு மாவட்ட எல்லை பகுதி பொது மக்களின் கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் முறையாக தமிழக அரசு பரிசிலினை செய்து எல்லை வரையறை செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இரு மாவட்ட மக்களின் நலனுக்கு எதிராக தங்களின் சுய லாபம் மற்றும் அரசியல் எதிர்காலத்திற்காக சிறப்பாக செயல்பட்டுவரும் இரு மாவட்ட நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட எல்லைகளை மீண்டும் வரையறை செய்ய சில மக்கள் பிரதிநிதிகள் முயற்சி செய்து வருகிறார்கள். ஏற்கனவே பலகட்ட கருத்து கேட்பிற்கு பிறகு எல்லை வரையறை செய்த நிலையில் பொது மக்களின் விருப்பத்திற்கு எதிராகவும் மீண்டும் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலும் அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையிலும் இரு மாவட்ட எல்லைகளை மாற்றும் முயற்சி மக்களுக்கு எதிர்பாகவும், மக்கள் நலனுக்கு விரோதமானதாகவும் உள்ளது. இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.