ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் அகற்றம்.. மண்ணை வாரி சாபம் விட்ட பக்தர்கள் - அரண்டு போன அதிகாரிகள்
கோயிலை இடித்தபோது காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளை நோக்கி பக்தர்கள் மண்ணை வாரி விட்டதால் அதிகாரிகளிடையே அச்சம்.
விழுப்புரம்: விழுப்புரத்தில் மயான பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயிலை நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் இடித்து தள்ளினர். அப்போது கோயிலை இடிக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு அகற்றம்
விழுப்புரம் நகரப் பகுதியான வழுதரெட்டி காலனி பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக அங்காளம்மன், குறத்தி அம்மன், பெரியாயி அம்மன் ஆகிய மூன்று கோவில்கள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயில்கள் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கடந்த மாதம் மயான கொள்ளை மற்றும் தீமிதி விழாவும் நடத்தப்பட்டன. இந்நிலையில் கோயில்கள் அனைத்தும் மயான பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக ஆரோக்கியசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவ்வழக்கு விசாரணையில் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் பெயரில் இன்று நகராட்சி ஆணையர் ரமேஷ் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற்றன.
போலீசார் குவிப்பு
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு அகற்றும் பணிகள் நடைபெற்றன. கோயில்கள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதியினர் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் கோயில் முழுவதுமாக இடிக்கப்பட்டன.
மண் வாரி சாபம் விட்ட பக்தர்கள்
கோயில் வரி, மின்சார கட்டணம், குடிநீர் வரி, உள்ளிட்ட அனைத்து வரிகளும் செலுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி அதிகாரிகள் கோயில்களை இடித்து வருவது இந்துக்களுக்கு எதிரான இந்த அரசு செயல்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். கோயிலை இடித்தபோது காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளை நோக்கி பக்தர்கள் மண்ணை வாரி விட்டதால் அதிகாரிகளிடையே அச்சம் ஏற்பட்டது