பாப்கார்ன் இயந்திர சுவிட்ச் பாக்ஸில் கை வைத்த சிறுவன்; மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சோகம்
விழுப்புரம் : பாப்கார்ன் இயந்திரம் இணைக்கப்பட்டிருந்த சுவிட்ச் பாக்ஸில் கை வைத்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு.
விழுப்புரம்: திண்டிவனம் அருகே உறவினர் வீட்டில் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு சென்றபோது அங்கிருந்த பாப்கார்ன் மிஷன் ஒயரை கையில் பிடித்ததால் மின்சாரம் தாக்கி ஐந்து வயது சிறுவன் உயிரிழந்தான்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ் ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் மற்றும் சுந்தரி தம்பதியின் மகன் மோத்திஸ். இவர் நொளம்பூர் கிராமத்திற்கு அவரது உறவினர் வீட்டிற்கு அவரது அம்மாவுடன் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு சென்றிருந்தான். அப்பொழுது அங்கு பாப்கார்ன் போடும் எந்திரத்தில் உள்ள பிளக்கை பிடித்தபோது அதிலிருந்து மின்சாரம் மோத்திஸ் மீது பாய்ந்து துடித்துடித்தான். அங்கிருந்தவர்கள் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி அவனை மீட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் கொண்டு செல்லும் வழியிலேயே மோத்திஸ் உயிர் இழந்தான்.
இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐந்து வயது சிறுவன் தன் தாய் மற்றும் உறவினர்கள் கண்முன்னே மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடல்கூறு ஆய்வுக்காக காவல்துறையினர் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்த பிறகும் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனை நிர்வாகம் பல மணி நேரம் காலதாமதமாக உறவினர்களை காக்க வைத்தனர். உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகு 12.30 மணி அளவில் உடல் கூறு ஆய்வு செய்து அந்த சிறுவனின் உடலை அனுப்பி வைத்தனர்.