ஃபிரீஸர் பாக்ஸில் மின்கசிவு... துக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்து விபத்து
உடல் வைக்கப்பட்டு இருந்த ஃபிரீஸர் பாக்ஸில் எதிர்பாராத விதமாக மின்சாரம் பயந்துள்ளது.
விழுப்புரம்: திண்டிவனம் அருகே துக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்த விபத்தில் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த எட்டியான் மகன் தேவன் (வயது 31), என்பவர் உடல்நிலை சரியில்லாமல் நேற்று உயிரிழந்தார். இவரது உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு அழுது கொண்டிருந்தனர். அப்போது உடல் வைக்கப்பட்டு இருந்த ஃபிரீஸர் பாக்ஸில் எதிர்பாராத விதமாக மின்சாரம் பயந்துள்ளது. இதனால் அங்கு அழுது கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த எட்டியான் மகன் பகவான் (27) மற்றும் அய்யம்மாள் (55), அஞ்சலை (40), பத்மாவதி (45), கௌரி (60), சந்தியா (28), வெண்ணிலா (39), மஞ்சுளா (45) உள்ளிட்ட 12 பேர் மீது மின்சாரம் பாய்ந்து பாதிக்கப்பட்டனர்.
அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த திமுக ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு துணைத் தலைவருமான ராஜாராம் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இது தொடர்பாக ரோசணை காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.