விரைவில் விழுப்புரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - அமைச்சர் கே.என்.நேரு உறுதி
விழுப்புரம் மக்கள் தொகைக்கேற்ப விழுப்புரம் நகராட்சி விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - அமைச்சர் கே.என்.நேரு உறுதி
விழுப்புரம்: மக்கள் தொகைக்கேற்ப விழுப்புரம் நகராட்சி விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார். விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட மகாராஜபுரம் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூபாய் ஒரு கோடியே 48 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நவீன தகன மேடை நிலையத்தையும், கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அறிவுசார் நூலகக் கட்டடத்தையும், காந்தி சிலை அருகிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று வரும் கூடுதல் கட்டடப் பணியினையும், பாண்டியன் நகரில் ரூபாய் 2 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் உந்து நிலையத்தையும் அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு, கடந்த ஒராண்டு காலமாக, ஒவ்வொரு துறை ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பணிகளின் நிலை குறித்து, நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என, முதலமைச்சர் எங்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், எனது துறை சார்ந்த பணிகளை நான் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறேன். இன்று காலை கடலூரில் ஆய்வு செய்தேன். அதனைத் தொடர்ந்து, தற்போது விழுப்புரத்தில் ஆய்வு செய்துள்ளேன். விழுப்புரத்தில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் ஓரிரு மாதங்களில் முடிவடைந்து விடும். விரிவாக்கப் பகுதி அதிகளவு இருப்பதால் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடியின் வேண்டுகோள் இல்லை, அவர் மூத்த அமைச்சர், அவருடைய உத்தரவின் பேரில், அவருடைய தொகுதியான திருக்கோவிலூரில் விரைவில் அறிவு சார் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலை போடுவது மாதிரி, கட்டடம் கட்டுவது மாதிரி, பாதாளச் சாக்கடை திட்டத்துக்கும், குடிநீர் திட்டத்துக்கும் ஒப்பந்ததாரர்கள் கிடைப்பதில்லை. அதனால், இருக்கக்கூடிய ஒப்பந்ததாரர்களைக் கொண்டு, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மக்கள் தொகைக்கேற்ப அருகிலுள்ள கிராமங்களை ஒன்றிணைத்து, விழுப்புரம் நகராட்சியை மிக விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார். அப்போது, உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் பழனி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.