![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
‘நகராட்சி கமிஷனர் வீட்டில் நாய்களை மேய்க்கணும்...இல்லனா வேலையை விட்டு போ சொல்றாங்க’ - தூய்மை பணியாளர்கள் வேதனை
தூய்மை பணியாளர்களை கழிவறை பகுதிகளில் சுத்தம் செய்ய கூறும் நகராட்சி ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களான கையுறை மாஸ்க்குகள் வழங்குவதில்லை.
![‘நகராட்சி கமிஷனர் வீட்டில் நாய்களை மேய்க்கணும்...இல்லனா வேலையை விட்டு போ சொல்றாங்க’ - தூய்மை பணியாளர்கள் வேதனை Villupuram Municipal employees who ask sanitation workers to clean toilet areas do not provide protective equipment such as gloves and masks TNN ‘நகராட்சி கமிஷனர் வீட்டில் நாய்களை மேய்க்கணும்...இல்லனா வேலையை விட்டு போ சொல்றாங்க’ - தூய்மை பணியாளர்கள் வேதனை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/13/3d1a901f782c64a09c5d1dcd818566d71663040083288194_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் தினந்தோறும் சுகாதார பணிகளை மேற்கொள்வதற்காக துப்புரவு பணியாளர்கள் 440 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 121 பேர் நிரந்தர பணியாளர்கள் ஆவர். மற்ற 319 பேரும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக சரிவர ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதுபோல் ஒரு நாள் விடுப்பு எடுத்தால் 3 நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு சரியானமுறையில் ஊதியம் வழங்கக்கோரியும், ஒரு நாள் விடுப்பு எடுத்தால் 3 நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்வதை நிறுத்தக்கோரியும் காலை 8 மணியளவில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக நுழைவுவாயில் முன்பு திடீரென திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி கமிஷனர் வீட்ல நாய்களை மேய்க்கணும்..இல்லனா வேலையை விடடு போ சொல்லறாங்க....https://t.co/wupaoCzH82 | #Viluppuram #tamilnadu #viralvideo pic.twitter.com/Ob38aZ7vFS
— ABP Nadu (@abpnadu) September 12, 2022
அப்போது அவர்கள் தங்களுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்காததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிடாமல் அங்குள்ள நுழைவுவாயில் முன்பு அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார், நகராட்சி கமிஷனர் சுரேந்திரஷா ஆகியோர் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தனர். அதன் பிறகு துப்புரவு பணியாளர்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தூய்மை பணியாளர் ஏழுமலை கூறியதாவது: தூய்மை பணியாளர்கள் கழிவறை பகுதிகளில் சுத்தம் செய்ய கூறும் நகராட்சி ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களான கையுறை மாஸ்க்குகள் வழங்குவதில்லை. அப்படி கேட்டால் விருப்பம் இருந்தால் பணி செய்ய மிரட்டுகின்றனர். மேலும், நகராட்சி ஆணையராக உள்ள சுரேந்தர் ஷா தினமும் தனது வீட்டில் வளர்க்க கூடிய மூன்று நாய்களை பராமரிப்பு பணி மற்றும் வாக்கிங் அழைத்து செல்ல ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி செய்யக் கூறுகிறார். அப்படி மறுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பணி இல்லை எனக் கூறுகின்றனர். நாய்களை பராமரிக்கும் பணியின் போது ஒப்பந்த ஊழியர்கள் பலர் நாய்க்கடி வாங்கியுள்ளனர் என்று வேதனையுடன் கூறினார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷாவிடம் விளக்கம் கேட்க முயன்றபோது அவர் எவ்வித பதிலும் கூறாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)