விழுப்புரம்: அரை மணி நேரத்தில் காலி செய்யப்பட்ட உள்ளாட்சி தின கண்காட்சி
விழுப்புரம் : அரை மணி நேரத்தில் காலி செய்யப்பட்ட உள்ளாட்சி தின கண்காட்சி
உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டு விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வாயிலில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை ஆட்சியர் மோகன் குடை பிடித்தவாறு தொடங்கி வைத்து பார்வையிட்ட அரை மணி நேரத்தில் காலி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் பத்துக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு கண்காட்சியினை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்துவைப்பதாக இருந்த நிலையில் கிராம சபையில் கலந்துகொண்டதால் அவர் வரமுடியாத காரணத்தால் மாவட்ட ஆட்சியர் மோகன் கொட்டும் மழையில் குடை பிடித்தவாறு தொடங்கி வைத்து கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். அரங்குகளை ஆட்சியர் பார்வையிட்ட போதே அரங்குகளில் இருந்தவர்கள் மழை நீர் அரங்குகளில் விழுந்ததால் கைகளில் குடை பிடித்தவாறே இருந்தனர்.
இதனையடுத்து ஆட்சியர் அரங்கினை பார்வையிட்டு சென்ற அரை மணி நேரத்திற்கு பிறகு அமைக்கப்பட்ட அரங்குகளை அமைத்தவர்கள் மழையின் காரணமாக காலி செய்து கொண்டு சென்றனர். இதனால் கண்காட்சி தொடங்கப்பட்டு அரை மணி நேரத்திலேயே அரங்குகள் காலியாகி வெறிச்சோடி காணப்பட்டது. பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பில்லாமல் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு அரை மணி நேரத்திலேயே காலி செய்யப்பட்ட சம்பவத்தால் பொதுமக்களுக்கு எந்தவித பயனின்று அமைந்தாற் போலும், அரசு நிதி வீண் விரயம் செய்யப்பட்டது போல் இச்சம்பவம் அமைந்துள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.