மரக்காணம் பகுதியில் கனமழை எச்சரிக்கை! ஆட்சியர் தலைமையில் ஆலோசனை; நடவடிக்கைகள் தீவிரம்
நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், ஆறுகள் ஆகியவற்றில் நீர் இருப்பு குறித்த தகவல் மற்றும் நீர் வெளியேறும் அளவினை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்திட வேண்டும்.

விழுப்புரம்: மரக்காணம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவிக்கையில்,
விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர பகுதியான மரக்காணம் மற்றும் வானூர் வட்டங்களில் உள்ள மீனவ கிராமங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் பாதுகாப்பு மையங்கள் மற்றும் புயல் பாதுகாப்பு மையங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்காக அவர்களுக்கான அடிப்படை வசதிகள், உணவுப்பொருட்கள் உள்ளிட்டவைகள் குறித்து அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், காவல்துறை, தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் காலத்தில் கனமழை அதிகம் உள்ள பகுதிகளில் மக்களை பாதுகாப்பான முறையில் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைப்பதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும்.
வருவாய் துறை சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள் அனைத்து கிராமங்களிலும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் கனமழை பெய்தால் உடனடியாக அப்பகுதி மக்களை சம்மந்தப்பட்ட முகாம்களில் தங்க வைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். இதுமட்டுமல்லாமல், ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஊராட்சி அளவில் முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தங்க வைக்கும் பட்சத்தில் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கும் பணிகளில் மேற்கொள்ள வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலையோரங்களில் மரங்கள் விழுந்தால் உடனடியாக அகற்றுவதற்கான மரம்வெட்டும் கருவிகள், ஜேசிபி இயந்திரங்கள் உள்ளிட்டவைகளை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகம் மூலம், மின் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக சரிசெய்வதற்கான மின்கம்பிகள், மின்கம்பங்கள் உள்ளிட்டவைகளை தயார் நிலையில் வைத்திருப்பதோடு, மின் பணியாளர்களும் தயார் நிலையில் இருந்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், ஆறுகள் ஆகியவற்றில் நீர் இருப்பு குறித்த தகவல் மற்றும் நீர் வெளியேறும் அளவினை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்திட வேண்டும். மேலும், போதிய மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் மற்றும் காலி சாக்குபைகள் ஆகியவற்றை இருப்பு வைத்துக்கொள்ளுமாறும் நீர்வளத்துறை, செயற்பொறியாளரிடம் அறிவுறுத்தப்பட்டது.
மீன்வளத்துறை, உதவி இயக்குநரிடம் புயல் ஏற்படுவதற்கு முன்னரே மீனவ கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு உடனே எச்சரிக்கை விடுக்கவும், படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவைத்திட அறிவுறுத்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள் மற்றும் அனைத்து தலைமை மருத்துவமனைகளிலும் போதிய மாத்திரை மற்றும் மருந்துகள் இருப்பு வைத்திடவும், பேரிடரின்போது தொற்றுநோய் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு வழங்கிட மொபைல் பம்பு செட்டுகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும், முன்னேற்பாடாக அனைத்து கிராமங்கள் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகளில் போதிய தண்ணீரை இருப்பு வைத்திட வேண்டும். எனவே, கனமழையின்போது மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
முன்னதாக மரக்காணம் ஒன்றியத்திற்க்குட்பட்ட நகர் ஊராட்சியில் ராய நல்லூர் செல்லும் சாலையில் ஓங்கூர் ஆற்று ஓடை அகலப்படுத்துவது தொடர்பாகவும், சுந்தாடு மேற்கு ஊராட்சியில் புதுஏரி புனரமைக்கும் பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட அழகன்குப்பம் பகுதியில் உள்ள பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களை தங்க வைப்பதற்கான இடம், ஜெனரேட்டர் வசதி, குடிநீர், கழிப்பறை வசதிகள், வெள்ள அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவிகள் போன்றவைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட அழகள்குப்பம் பகுதியில் உள்ள பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையத்தில் பேரிடர் கால பயிற்சி பெற்ற தன்னார்வலர்களுடன் பேரிடர் காலங்களில் செயல்படும் விதம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அழகன் குப்பம், வசவன் குப்பம், கைபானைக்குப்பம், எக்கியார்குப்பம் மற்றும் மண்டவாய் குப்பம் ஆகிய பகுதியை சாரந்த பேரிடர் காலத்தில் முதல் தகவல் அளிப்பவர்கள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேரிடர் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும், துறை சார்ந்த அலுவலர்களுடன் தன்னார்வலர்கள் இணைந்து வாட்சப் குருப் உருவாக்கி பேரிடர் தொடர்பான தகவல்களை பரிமாரிக்கொள்ள வேண்டும். தன்னார்வலர்கள் துறை சார்ந்த அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு நேரடியாக பிரச்சனைகள் குறித்து தெரிவிக்கலாம். இப்பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை பாதுகாப்பான இடத்தில் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.





















