பள்ளி வாகனங்கள் ஆய்வில் அலட்சியம்; துணியால் கட்டப்பட்ட சைடு மிரர்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ஆய்விற்கு வந்த தனியார் பள்ளி வாகனத்தின் ஸ்டியரிங், சைடு மிரர் ஆகியவைகள் கந்த துணியால் கட்டப்பட்டதை கூட அதிகாரிகள் சரியாக பார்க்காமல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளி வாகனங்களின் உறுதி தன்மை குறித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார். ஆய்விற்கு வந்த தனியார் பள்ளி வாகனத்தின் ஸ்டியரிங், சைடு மிரர் ஆகியவைகள் கந்த துணியால் கட்டப்பட்டதை கூட அதிகாரிகள் சரியாக பார்க்காமல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பள்ளி வாகனங்கள் ஆய்வு என்பது, தனியார் பள்ளிகள் வழங்கும் பள்ளி வாகனங்கள் மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஏற்றவாறு உள்ளதா என்பதை ஆய்வு செய்வது. இந்த ஆய்வு, வாகனங்களின் அமைப்பு, படிக்கட்டுகள், ஜன்னல்கள், அவசர வழி உள்ளிட்ட வசதிகள், தீயணைப்பு கருவி, கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ் போன்றவற்றை உள்ளடக்கியது. இந்த ஆய்வு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை மூலம் நடத்தப்படுகிறது.
அந்தவகையில்., தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 144 தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான வேன் மற்றும் பேருந்துகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திலுள்ள மைதானத்தில் ஆய்வு செய்தார்.
பள்ளி மாணவ, மாணவிகள் பயணம் செய்யக்கூடிய வேன் மற்றும் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள், தீ தடுப்பு கருவிகள், முதலுதவி பெட்டிகள் அவசரகால வழி, உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதா எனவும் ஓட்டுநர்களுக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் கண் பரிசோதனை மற்றும் ஆபத்து காலங்களில் நடந்து கொள்வதன் முறைகள் குறித்து ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து வாகன ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனையும் தீ தடுப்பு கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆய்விற்கு பிறகு பேட்டியளித்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான்.,
விழுப்புரத்தில் இருக்கக்கூடிய 144 தனியார் பள்ளிகளுடைய வாகனங்களுடைய தன்மை சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் விழுப்புரம் மாவட்டத்தை பொருத்தவரை 144 தனியார் பள்ளிகள் உள்ள 611 வாகனங்கள் உள்ளதில் முதற்கட்டமாக இன்றைக்கு 300 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக செய்யப்பட்ட வாகனங்களை மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் சில பேருந்துகளில் இருக்கை கைப்பிடிகள், இருக்கைகள் உடைந்திருந்ததால் பத்து நாட்களில் சரி செய்து கொண்டுவரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆய்விற்கு வந்த தனியார் பள்ளி வேன்கள் சிலவற்றில் பெயிண்டுகள் உதிர்ந்தும், ஸ்டியரிங் மற்றும் சைடு கண்ணாடிகள் கந்த துணியால் கட்டப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பள்ளி வாகனங்கள் ஆய்வு ஏன் முக்கியமானது?
- மாணவர்களின் பாதுகாப்பு: பள்ளி வாகனங்கள் மாணவர்கள் பயணம் செய்வதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
- விபத்துகளைத் தடுப்பது: ஆய்வு மூலம் வாகனங்களில் உள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டு சரி செய்யப்படலாம்.
- சட்டதிட்டங்களை பின்பற்றுவது: பள்ளி வாகனங்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
- பள்ளி வாகனங்களில் ஒரு பெண் உதவியாளர் இருக்க வேண்டும்.
- ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
- பாதுகாப்பு அம்சங்கள்: வாகனத்தில் சீட் பெல்ட், ஃபயர் எக்ஸ்டிங்யூஷர், ஃபர்ஸ்ட் ஏட் கிட், அவசர உதவிக்கு போன் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும்.
- வாகனத்தின் நிலை: வாகனத்தின் நிலை, பிரேக், டயர், லைட், ஃபயர் எக்ஸ்டிங்யூஷர் போன்றவை சரிபார்க்கப்பட வேண்டும்.





















