Villupuram: அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கட்சியில் இருந்து நீக்கம்; திமுகவில் இணையப்போவதில்லை - முரளி
விழுப்புரம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே நீக்கப்பட்டுள்ளதாக முரளி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட புரட்சி தலைவி பேரவைச் செயலாளரான எஸ்.முரளி (எ) ரகுராமன், இவரின் இளைய மகன் ஹரிகிருஷ்ணன் பாஜக விளையாட்டு அணியின் மாநில செயலாளராக உள்ளார். இந்த நிலையில் ஹரிகிருஷ்ணன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு திண்டிவனத்தில் நேற்று முன்தினம் 39 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தினார். இதனை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வைத்து நடத்தி வைத்தார். இதில் புரட்சி தலைவி பேரவைச் செயலாளரான எஸ்.முரளி (எ) ரகுராமன் கலந்து கொண்டார். இதையடுத்து எஸ்.முரளி (எ) ரகுராமனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதாவது, அதிமுக கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையிலும் நடந்து கொண்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு கலங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் எஸ்.முரளி(எ) ரகுராமன் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியிலிருந்த நீக்கப்பட்ட முரளி விழுப்புரம் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவராக பதவி வகித்து வந்ததால் இன்று கூட்டுறவு வங்கியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முரளி, அதிமுகவில் பல ஆண்டுகளாக பணியாற்றிய வந்த தனக்கே எந்த வித விளக்கமும் கேட்காமல் தன்னை நீக்கியதாகவும், கட்சியிலுள்ள மைனாரிட்டி சமூகத்தினருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே தன்னை கட்சியிலிருந்து நீக்கி உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் தன்னை கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்கபோவதில்லை என்றும் திமுகவில் இணையப்போவதில்லை எனக் கூறினார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்