பைக்கில் வைத்திருந்த 3 லட்சம் ரூபாய் திருட்டு... சிசிடிவியில் சிக்கிய திருடன்
திண்டிவனத்தில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
விழுப்புரம்: திண்டிவனத்தில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ. 3 லட்சம் திருட்டு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தியாகி சண்முகம் பிள்ளை வீதியை சேர்ந்தவர் தீனதயாளமூர்த்தி. இவரது மனைவி விமலா, 45. இவர் திண்டிவனம் நேரு வீதியில் உள்ள இந்தியன் வங்கியில் தனது மகளின் திருமணத்திற்காக ரூ.3 லட்சம் கடன் பெற்று பணத்தை தனது ஸ்கூட்டியில் இருந்த சீட்டிற்கு அடியில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.
ஸ்கூட்டியின் சீட்டை உடைந்து ரூ.3 லட்சம் பணம் திருட்டு
வாகனத்தில் இருந்த பணத்தை எடுக்காமல் வீட்டிற்கு உள்ளே சென்றார். பின் நகை வாங்குவதற்காக ஸ்கூட்டியை எடுக்க வந்து பார்த்த போது ஸ்கூட்டியின் சீட் உடைந்து இருப்பதும், அதில் இருந்த ரூ.3 லட்சம் திருடுபோனதை கண்டு விமலா அதிர்ச்சி அடைந்தார்.
cctv காட்சியில் சிக்கிய மர்ம நபர்
இதுகுறித்து விமலா திண்டிவனம் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் போலீசார் சி.சி.டி.வி. காட்சியை ஆய்வு செய்தனர். அதில் விமலா வீட்டின் அருகே ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் விமலா ஸ்கூட்டியின் சீட்டை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
அச்சத்தில் திண்டிவனம் பொதுமக்கள்
தொடர்ந்து, புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பணத்தை திருடிய மர்ம நபரை தேடிவருகின்றனர். திண்டிவனத்தில் பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.