கோவிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை... நீதிமன்றம் அதிரடி - குற்றவாளிக்கு என்ன தண்டனை?
விழுப்புரத்தில் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை.

விழுப்புரம்: கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவிலுக்கு சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டல்
விழுப்புரம் அருகேயுள்ள கோலியனூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது 10 வயது மகளுடன் கடந்த 28.8.2023 அன்று கோலியனூர் பகுதியிலுள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது சிறுமியின் தாய், சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் கோவில் வளாகத்தில் நின்று கொண்டிருந்தபோது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
இதைப்பார்த்த அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் விரைந்து சென்று அந்த நபரை மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்து வளவனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர், விழுப்புரம் கே.கே.சாலை அண்ணா நகரை சேர்ந்த கூலித்தொழிலாளியான ரமேஷ் (47) என்பது தெரியவந்தது, தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்ததில் இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா, குற்றம் சாட்டப்பட்ட ரமேசுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட ரமேஷ், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
போக்சோ சட்டம்
போக்சோ சட்டம் என்பது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (The Protection of Children from Sexual Offences Act), 2012 ஆகும். இந்த சட்டம், இந்தியாவில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஆபாசப் பொருட்களிலிருந்து பாதுகாப்பதற்காக இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதில் ஒரு விரிவான அணுகுமுறையை வழங்குகிறது. மேலும், சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் அத்தகைய குற்றங்களை விசாரிக்கவும் வழிவகை செய்கிறது.
குழந்தையின் நலனே பிரதானம்
சிறப்பு நீதிமன்றங்கள் இதற்காக நிறுவப்பட வேண்டும். வழக்கின் துவக்கத்திலிருந்து இறுதி வரை - புகார் கொடுப்பது, முதல் தகவல் அறிக்கை பதிவு, விசாரணை, வாக்கு மூலம் பதிவு, வழக்கு நடப்பது போன்ற அனைத்திலும் - பாதிக்கப் பட்ட குழந்தைகளின் நலன் மையமாக இருக்க வேண்டும். அதுதான் மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் என்று சட்டம் கூறுகிறது. உதாரணமாக, “பாதிக்கப்பட்ட சிறுமி/சிறுவரின் சாட்சியம் அவர்களின் வீட்டிலோ அல்லது அவர்கள் விரும்புகிற இடத்திலோ தான் பதிவு செய்யப் பட வேண்டும். துணை ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பில் உள்ள பெண் காவல் அதிகாரி தான் பதிவு செய்ய வேண்டும். அப்போது காவலர் சீருடையில் அந்த அதிகாரி இருக்கக் கூடாது.”இரவு நேரத்தில், அவர்களைக் காவல் நிலையத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது.
குழந்தை எதை எப்படி சொல்லுகிறதோ, அதை அப்படியே அந்த வார்த்தைகளில் பதிவு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளி என்றால், குழந்தை பேசுவதைப் புரிந்து கொண்டு எடுத்துச் சொல்ல சைகை மொழி பேசுபவர் அல்லது குழந்தையின் பெற்றோர், உறவினரின் உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.மருத்துவப் பரிசோதனை, பெற்றோர்/உற்றோரின் முன்னிலையில் செய்யப் பட வேண்டும். பெண் குழந்தை என்றால், பெண் மருத்துவர் செய்ய வேண்டும். அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க நேர்கிறபோது, மருத்துவர்கள் காவல் துறை அல்லது நீதி துறையின் உத்தரவைக் கோரக் கூடாது.
வழக்கு நடக்கும்போது, அடிக்கடி குழந்தை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.விசாரணையோ, வழக்கோ, வாக்கு மூலமோ பாதிக்கப்பட்ட சிறுமி/சிறுவரைத் திரும்ப திரும்ப நடந்ததைச் சொல்ல வற்புறுத்தக் கூடாது.குறுக்கு விசாரணை என்ற பெயரில் சங்கடப் படுத்தும் கேள்விகள் அல்லது நடத்தையை சந்தேகிக்கும் கேள்விகளைக் கேட்கக் கூடாது.





















