விழுப்புரம் : 183 கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட முகாம்
விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட முகாம் 183 கிராமத்தில் நடைபெற உள்ளது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-22 ஆம் ஆண்டு முதல் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டுவரும் கிராம பஞ்சாயத்துகளில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் இத்திட்டத்தினைச் செயல்படுத்தி அக்கிராமப் பஞ்சாயத்துகளைத் தன்னிறைவு பெற்ற கிராமங்களாகவும் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி பெற்ற கிராமங்களாகவும் மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். நடப்பு ஆண்டில் இத்திட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் 183 கிராமப் பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் கீழ் இயங்கும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல், வேளாண்மை விற்பனை மற்றும் சர்க்கரைத்துறை ஆகிய துறைகளின் திட்டங்களைத் தேர்வு செய்யப்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் செயல்படுத்துவது மட்டுமல்லாது வேளாண்மை - உழவர் நலத்துறையின் தொடர்புடைய துறைகளான வருவாய், ஊராட்சி, கால்நடை, கூட்டுறவு, பால்வளம் போன்ற துறைகளின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தேர்வு செய்யப்பட்ட 183 கிராம பஞ்சாயத்துகளில் உழவர்களுக்கான முகாம் 19.01.2023 மற்றும் 09.02.2023 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடிக்கான ஆலோசனைகள், விதை நேர்த்தி, தொழில்நுட்ப ஆலோசனைகள், விதை நேர்த்தி ஒருங்கிணைந்த உர நிர்வாகம், ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம், திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்குதல், உழவன் செயலியை விவசாயிகளின் கைபேசியில் பதிவிறக்கம் செய்து டுபொருள் தேவையை பதிவு செய்தல், பயிர் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை பெறுதல்,
PM-KISAN திட்டத்தில் புதிய நபர்களை இணைத்தல், ஏரி மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி கோரும் விண்ணப்பங்களை பெறுதல், கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் மற்றம் குடல்புழு நீக்கம் போன்ற சேவைகள் மட்டுமல்லாது இத்திட்டத்தில் ஒப்பளிப்பு செய்யப்பட்ட இடுபொருட்கள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட உள்ளது. முகாம் நடைபெறும் நாட்களில் வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் அம்முகாம்களில் விசாயிகளை நேரில் சந்தித்து ஆலோசனைகள் வழங்க உள்ளனர். எனவே தேர்வு செய்யப்பட்ட 183 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகள் இம்முகாம்களில் பங்கு பெற்று பயன்பெறுமாறு தெரியவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக வானூர் வட்டார உதவி இயக்குனர் சுமதி கூறுகையில்...வானூர் பகுதியில் ஓட்டை , கொடுர், பூத்துறை, தென்சிருவளூர், டி.பரங்கனி, ஆப்பிரம்பட்டு, கோரகேணி, செங்கமேடு, பெரம்பை, தொள்ளமூர், ரங்கநாதபுரம், நாராயணபுரம், துருவை,கழுபெரும்பக்கம், வி.புதுப்பக்கம் அருவப்பக்கம், பொன்னம்பூண்டி,எலையண்டிபட்டு,கொழுவரி ஆகிய வானூர் வட்டாரத்தில் உள்ள 19 கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் முகாம் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்