விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் டிஸ்சார்ஜ்
சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் டிஸ்ஜார்ஜ், மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை
விழுப்புரம்: சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் டிஸ்ஜார்ஜ் ஆன நிலையில் மேலும் 2 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்தது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடந்த 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் விற்கப்படும் சாராயத்தை வாங்கி வந்து பலர் குடித்து வருகின்றனர்.
அதன்படி இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கஞ்சனூர் அருகே உள்ள பூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் புதுச்சேரி மாநிலம் திருக்கனூரில் விற்கப்பட்ட சாராயத்தை வாங்கி வந்து கடந்த 8ம் தேதி இரவு தனது நண்பர்களுடன் குடித்துள்ளார். இந்நிலையில் 9ம் தேதி காலை சாராயத்தை குடித்த சக்திவேல் உள்ளிட்ட 6 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட பூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், காளிங்கராஜ், சுரேஷ்பாபு, ராஜா, பிரகாஷ், பிரபு உள்ளிட்ட 6 பேர் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று மேலும் மணி என்பவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உடல் நலம் பெற்ற காளிங்கராஜ், சுரேஷ்பாபு, ராஜா, பிரபு, ரங்கநாதன் உள்ளிட்ட 5 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் சக்திவேல், மணி உள்ளிட்ட 2 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட பிரபுவை கஞ்சனூர் போலீசார் கைது செய்துள்ளனர். பிரபு தான் திருக்கனூரில் இருந்து சாராயம் வாங்கி வந்து சாராயம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.