விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 12ம் வகுப்பு மாணவி மரணம் - தவறான சிகிச்சை காரணமா?
விழுப்புரத்தில் தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழந்துவிட்டதாக கூறி உறவினர்கள் மருத்துவமனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்: விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வயிற்று வலி ஏற்பட்டு அனுமதிக்கப்பட்ட பனிரெண்டாம் வகுப்பு மாணவி தவறான சிகிச்சையால் உயிரிழந்துவிட்டதாக கூறி உறவினர்கள் மருத்துவமனை வளாக்கத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
12ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு:
விழுப்புரம் நகர பகுதியான பொய்யப்பாக்கம் கிராமத்தை சார்ந்த அய்யப்பன் என்னும் மீன் வியாபாரியின் மகள் அரசு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்றைய தினம் கடுமையான வயிற்று வலி காரணமாக முண்டியம்பாக்கதில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவியின் கல்லீரல், கனையம் ஆகிய பகுதிகளில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால் அதற்கேற்றவாறு சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்றை தினம் மாணவியின் கழுத்தில் மருத்துவர்கள் ஊசி செலுத்திய சில மணி நேரத்திலையே மாணவிக்கு வலிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உறவினர்கள் முற்றுகை:
இதனையடுத்து மாணவியின் பெற்றோர்கள் உறவினர்கள் வயிற்று வலிக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏன் கழுத்தில் ஊசி செலுத்த வேண்டும்? அதனால் தான் உயிரிழந்து விட்டதாகவும் தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழந்து விட்டதாக கூறி மருத்துவமனையின் வளாகத்தில் முற்றுகையிட்டு மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சென்னை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட உறவினர்கள் புறப்படவே உடனடியாக டி எஸ் பி சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இது தொடர்பாக புகார் அளியுங்கள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்தார்.
இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கைவிட்டு சென்றனர். இச்சம்பவத்தில் மருத்துவமனை வளாகம் முன்பு மூன்று மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாணவி உயிரிழப்பிற்கு தவறான சிகிச்சையினால் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இறந்த மாணவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.