கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட மூதாட்டி கொலை; வாலிபருக்கு ஆயுள் தண்டனை
தனது வீட்டின் பூஜை அறையில் மண்வெட்டியால் பள்ளம் தோண்டி இந்திராணியின் உடலை போட்டு மண்ணால் மூடி தடயங்களை மறைத்துள்ளார். இந்த கொலையை மறைக்க குப்புவும் உடந்தையாக இருந்துள்ளார்.
விழுப்புரம்: கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட ஆத்திரத்தில் மூதாட்டியை கொன்று நகையை கொள்ளையடித்ததுடன் அவரது உடலை வீட்டில் குழிதோண்டி புதைத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட ஆத்திரத்தில் மூதாட்டி கொலை செய்த வாலிபர்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே மாரங்கியூரை சேர்ந்தவர் தாண்டவராயன் மனைவி இந்திராணி (வயது 72). இவரது மகன்களான பன்னீர்செல்வம், ரவிச்சந்திரன், மகள்களான தேன்மொழி, இந்துமதி, தேவி ஆகியோருக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். தாண்டவராயன் மறைவுக்குப்பிறகு இந்திராணி மட்டும் தனியாக வசித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி மகன் சிவசங்கர் (24) என்பவர், தான் செய்து வந்த டெக்கரேஷன் தொழிலை விரிவுப்படுத்த இந்திராணியின் மகள்களான தேவியிடம் ரூ.22 ஆயிரமும், தேன்மொழியிடம் ரூ.8 ஆயிரமும் கடன் வாங்கினார். பலமுறை கேட்டும் அவர் கடனை திருப்பிக் கொடுக்கவில்லை. பின்னர் சிவசங்கர், தனது மனைவியுடன் சேலம் சென்றுவிட்டார்.
இதனால் இந்திராணி, சிவசங்கர் வீட்டிற்கு அடிக்கடி சென்று தனது மகள்கள் கொடுத்த கடனை திருப்பித்தரும்படி சிவசங்கரின் தாய் குப்புவிடம் (46) கேட்டுள்ளார். இதனால் இந்திராணி மீது சிவசங்கருக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. கடந்த 18.12.2022 அன்று சேலத்தில் இருந்து மாரங்கியூருக்கு சிவசங்கர் வந்தார்.
மூதாட்டியை கொன்று நகை கொள்ளை
இதையறிந்ததும் இந்திராணி, அங்கு சென்று தனது மகள்கள் கொடுத்த பணத்தை திருப்பித்தரும்படி சிவசங்கர், அவரது தாய் குப்பு ஆகிய இருவரிடமும் கேட்டுள்ளார். அப்போது இந்திராணி அணிந்திருந்த நகைகளை கவனித்த சிவசங்கர், குப்பு ஆகிய இருவரும் இந்திராணியை கொலை செய்து நகைகளை கொள்ளையடிக்க திட்டம் தீட்டினர்.
இந்நிலையில் மறுநாள் 19.12.2022 காலை 7.30 மணியளவில் சிவசங்கர், இந்திராணி வீட்டிற்கு சென்று உங்களுக்கு தர வேண்டிய பணம் எனது வீட்டில் உள்ளது, நீங்கள் நேரில் வந்தால் கொடுத்து விடுகிறேன் என்றுகூறி அழைத்துச்சென்றார். பின்னர் அங்கு வீட்டில் குப்பு இல்லாத நிலையில் கதவை இழுத்து மூடி இந்திராணியை சிவசங்கர், ரீப்பர் கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை செய்து அவர் அணிந்திருந்த 5 பவுன் நகைகளை கொள்ளையடித்தார். பின்னர் அவர், தனது வீட்டின் பூஜை அறையில் மண்வெட்டியால் பள்ளம் தோண்டி இந்திராணியின் உடலை போட்டு மண்ணால் மூடி தடயங்களை மறைத்துள்ளார். இந்த கொலையை மறைக்க குப்புவும் உடந்தையாக இருந்துள்ளார்.
வாலிபருக்கு ஆயுள் தண்டனை
இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கர், குப்பு ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசன், குற்றம் சாட்டப்பட்ட சிவசங்கருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும், குப்புவை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட சிவசங்கர், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சங்கீதா ஆஜரானார்