150 ஆண்டுகளில் முதன்முறையாக பக்தர்கள் இன்றி நடந்த வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா
’’நேற்று மக்கள் குறைவாகவே வந்த நிலையில் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் ஜோதி தரிசனத்தை பார்த்தனர், அதில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்’’
![150 ஆண்டுகளில் முதன்முறையாக பக்தர்கள் இன்றி நடந்த வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா Vadalur Satya Gnanasabai Thaipusam Jothi Darshan Festival, which was held without devotees for the first time in 150 years 150 ஆண்டுகளில் முதன்முறையாக பக்தர்கள் இன்றி நடந்த வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/19/0ea0cd0aad2430df14df368a547ee97d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தைப்பூசத்தை முன்னிட்டு வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் 7 திரைகளை விலக்கி 151வது ஆண்டு ஜோதி தரிசன விழா இன்று அதிகாலை யுடன் நிறைவுபெற்றது பக்தர்களுக்கு தடை விதித்திருந்த நிலையில் தடையை மீறி ஏராளமான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தனர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன். பசியினால் இளைத்தே வீடுதோறிரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்’ எனப் பாடிய ராமலிங்க அடிகளார் எனும் வள்ளலார், கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர். இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில், வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவினார் வள்ளலார். தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளன்று, சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம். ஆண்டுதோறும் ஜோதி தரிசன விழா இங்கு கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி 151-வது ஆண்டு ஜோதி தரிசன விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று சன்மார்க்க கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சத்திய ஞானசபையில் நேற்று காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் ஞானசபையில் நிலை கண்ணாடிக்கு முன்பு கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன் நிறம், வெள்ளை, கலப்பு வண்ண திரை என்று 7 வண்ண திரைகள் உள்ளன. அந்த திரைகள் ஒவ்வொன்றாக விலக்கி நிலை கண்ணாடிக்குள் இருக்கும் ஜோதியை காண்பதே ஜோதி தரிசனமாகும்.
தொடர்ந்து நேற்று காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி மற்றும் இன்று காலை 5.30 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற்றது. அதன்படி இன்று காலை 5.30 மணிக்கு நடந்த தரிசனத்துடன் ஜோதி தரிசனம் முடிவடைந்தது முன்னதாக நிலை கண்ணாடி முன் காணப்பட்ட 7 திரைகளும் ஒவ்வொன்றாக விலக்கப்பட்டது. அப்போது நிலை கண்ணாடிக்கு பின் வள்ளலார் கரத்தால் ஏற்றி வைத்த தீபம் பிரகாசமாக காட்சி அளித்தது. ‘அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி’ என்ற மகா மந்திரத்தை உச்சரித்து ஜோதியை தரிசனம் காண்பிக்கபட்டது.
கொரோனா ஊரடங்கு விதிமுறையின் காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி இல்லை மேலும் வள்ளலார் சபை வளாகத்தில் அன்னாதானம் வழங்கவும் கடைகள் மற்றும் ராட்டினம் அமைக்கவும் என எதற்கும் அனுமதி இல்லை மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் வீட்டிலிருந்தபடி நேரடியாக காண வள்ளலார் தெய்வ நிலைய யூடியூப் சேனலில் நேரடியாக பார்க்கலாம் என்றும் மேலும் தொலைக்காட்சி வாயிலாகவும் ஜோதி தரிசனத்தை பார்க்கலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் நேற்று மக்கள் குறைவாகவே வந்த நிலையில் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் ஜோதி தரிசனத்தை பார்த்தனர், அதில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களை காவல் துறையினர் கோயிலுக்கு உள்ளே அனுமதிக்கவில்லை கோயிலுக்கு வெளியே இருந்து தான் தரிசனத்தை பார்த்தனர். 151 ஆண்டில் முதன்முறையாக பக்தர்கள்யின்றி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டதுவள்ளலார் சித்திபெற்ற திருஅறை உள்ள மேட்டுக்குப்பத்தில் நாளை மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை திரு அறை தரிசனம் நடைபெற இருக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)