விழுப்புரம்: தென்பெண்ணையாற்று வெள்ளத்தில் சிக்கி சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு
’’தொடர் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது’’
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சித்தலிங்கமடம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களின் மகள் சைலத்மீரா (10). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், மகாலட்சுமியின் தந்தையான திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த வெள்ளிக்கண்ணு என்பவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து அவரது இறுதி சடங்கில் பங்கேற்க சின்னராஜ் குடும்பத்தினர் சென்றிருந்தனர். இறுதி சடங்கு முடிந்த பின்னர், மதியம் 12.30 மணியளவில் அருகே உள்ள தெண்பெண்ணையாற்றில் குளிப்பதற்காக சைலத்மீரா, மகாலட்சுமி மற்றும் உறவினர் பெண் என்று 3 பேர் சென்றனர்.
அப்போது சைலத்மீரா தண்ணீரில் குளிக்க இறங்கிய போது, ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். உடன் அதர்ச்சியடைந்த அவரது தாய் கதறிசென்று அவரது உறவினர்களிடம் சம்பவம் குறித்து கூறியுள்ளார். அவரது உறவினர்கள் திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலயைத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று சைலத்மீராவை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதில் மாலை 3.45 மணிக்கு சிறுமியை பிணமாக தீயணைப்பு வீரர்கள் மீ்ட்டனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தீபாவளி கொண்டாட மாமியார் வீட்டுக்கு வந்த போது, வராகநதி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட டிரைவர் பிணமாக மீட்கப்பட்டார்:
சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (35). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வள்ளி. கடந்த 2ஆம் தேதி தனது மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் மேல்மலையனூர் அருகே செவலபுரை கிராமத்தில் உள்ள தன் மாமனார் வீட்டிற்கு தீபாவளி கொண்டாடுவதற்காக வந்துள்ளார். மாலையில் அங்குள்ள சிறுவாடி வராக நதி செல்லும் தரைப் பாலம் அருகே சிவக்குமார் குளித்து கொண்டிருந்தார். அப்போது ஆற்றில் அதிகளவில் தண்ணீர் சென்றதால், அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
இதுபற்றி அறிந்த மேல்மலையனூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சாமளவண்ணன் தலைமையில் வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. கடந்த 3ஆம் தேதி அமைச்சர் செஞ்சி மஸ்தான், தாசில்தார் நெகருன்னிசா ஆகியோர் அங்கு சென்று, மீட்பு பணியை துரிதப்படுத்தினர். தொடர்ந்து அவர் கிடைக்காத நிலையில், நேற்று 4 ஆவது நாளாக சிவக்குமாரை தேடும் பணி நடைபெற்றது. இதில் மேல்மலையனூர், செஞ்சி ஆகிய தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த 35 வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர் அடித்து செல்லப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சிவக்குமார் முட்புதரில் சிக்கிக்கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அவரை பிணமாக மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். தொடர்ந்து அவரது உடலை வளத்தி இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தீபாவளி கொண்டாட வந்த இடத்தில் சிவக்குமார் ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தது அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.