கடலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறாளிகள் - மாத உதவித்தொகையை உயர்த்த கோரிக்கை
கடும் ஊனமுற்றவர்களுக்கு மாத உதவித் தொகை 5000 ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை
உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் கடலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாயில் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். தமிழகத்தின் அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையாக 3000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் தமிழகத்தில் பல ஆண்டுகளாக மாற்றுத் திறனாளிகள் உதவி தொகை 1,000 ரூபாயாக உள்ளது இதனை மற்ற மாநிலங்களில் வழங்கும் உதவித்தொகை போல் மூன்றாயிரம் ரூபாயாக உயர்த்தித் தர வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று கடலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் சார் ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு அமர்ந்து தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், கடும் ஊனமுற்றவர்களுக்கு மாத உதவித் தொகை 5000 ரூபாய் வழங்க வேண்டும், சிறு தொழில் தொடங்க மானியத்துடன் வங்கி கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை சங்கம் மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் அவர்கள் கூறுகையில், தற்பொழுது தங்களுக்கு வழங்கப்படும் மாத உதவி தொகை 1,000 ரூபாயாக உள்ளது இதன் படி தங்களுக்கு ஒரு நாளைக்கு 33 ரூபாய் கிடைக்கிறது இதனை வைத்துக்கொண்டு தங்காலால் மூன்று வேளை டீ மட்டுமே குடிக்க முடியும் மேலும் தங்களால் தங்களுக்கு தேவைப்படும் ஒரு வேலை உணவை கூட இந்த தொகையினை வைத்து வாங்க முடியாத சூழல் உள்ளது, ஆகையால் தமிழக அரசு தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றி தங்களுக்கு மாத உதவித்தொகையை உயர்த்தி தர வேண்டும் எனவும்,
மேலும் கடந்த மாதம் கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக தொடர்ந்து பெய்த கன மழையின் காரணமாகவும் கடந்த மாதம் தென்பெண்ணை மற்றும் கெடிலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவும் நிறைய மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர் அதனையும் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர். இதேபோன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இதே கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசைக் கண்டித்து பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் சாலை அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.