வெளுத்து வாங்கிய கனமழை; ஊட்டி போல் மாறிய விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி எடுத்த நிலையில் தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது

விழுப்புரம்: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவு வருகிறது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. விழுப்புரம் நகரம் மற்றும் திண்டிவனம், மரக்காணம், வானூர், திருவக்கரை, விக்கிரவாண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் அதிகாலை பெய்த மழை என்பது கிளியனூர் பகுதியைச் சார்ந்த முனுசாமி என்பவர் வீட்டில் இருந்த தென்னை மரத்தில் இடி தாக்கியதில் இரண்டு தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்தது.

