மார்ச் 19, 20 ஆம் தேதிகளில் புதுச்சேரியில் காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் என அறிவிப்பு
புதுச்சேரியில் காவலர் எழுத்துத்தேர்வு அடுத்த மாதம் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
புதுச்சேரியில் காவலர் எழுத்துத்தேர்வு அடுத்த மாதம் 19, 20 ஆகிய தேதிகளில் நடக்கிறது. புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள காவலர்கள்- 390, ரேடியோ டெக்னீசியன்- 12 மற்றும் டெக் ஹேண்ட்லர்- 29 (படகு ஓட்டுனர்) என மொத்தம் 431 பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு இறுதியில் அறிவிப்பு வெளியானது. இதற்காக மொத்தம் 17 ஆயிரத்து 227 பேர் விண்ணப்பித்தனர். இதில் 14,787 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதித்தேர்வு (ஓட்டம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல்) கடந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கி கடந்த 12ஆம் தேதி வரை கோரிமேடு காவலர் பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில் ரேடியோ டெக்னீசியன் பிரிவுக்கு மட்டும் நிர்வாக காரணங்களால் தற்காலிகாக தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. காவலர் மற்றும் டெக் ஹேண்ட்லர் தேர்வில் 7,530 பேர் மட்டுமே பங்கேற்றனர். அவர்களில் உடல் தகுதி தேர்வில் 2,894 பேர் தகுதி பெற்றனர். இதில் ஆண்கள் 2,207, பெண்கள் 687 பேர். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதித்தேர்வில் தகுதி பெற்றவர்கள் எழுத்துத் தேர்வு எப்போது நடைபெறும் என காத்திருந்தனர்.
இந்த நிலையில் புதுச்சேரி காவல் துறை எழுத்து தேர்வு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று இரவு வெளியிட்டது. அதன் விவரம்:-
புதுச்சேரி தலைமை செயலகம் பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத் துறை தேர்வு பிரிவு சார்பில் காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) 19 ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை ஒரு பிரிவுக்கும், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மற்றொரு பிரிவுக்கும் தேர்வு நடக்கிறது. 20-ந் தேதி டெக் ஹேண்டலர்களுக்கான எழுத்துத் தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 11.30 மணி வரை நடக்கிறது. எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம், தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்